Tamilnadu Name History: 1956 ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதும், மெட்ராஸ் என்றே தமிழ்நாடு அழைக்கப்பட்டது. இதையடுத்து, ஜூலை 18 ஆம் தேதி 1967 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஜனவரி 14 ஆம் தேதி 1969 ஆண்டு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு பெயர் மாற்றமான, வரலாற்றுச் சுவடுகளை சற்று திரும்பி பார்ப்போம்.
சங்கரலிங்கனார்:
சுதந்திரத்திற்கு முன்பே, தமிழ்நாடு என பெயர் மாற்றம் கோரி பல தலைவர்கள் கோரிக்கை வைத்தே வந்தனர். 1956 ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாநிலத்தில் இருந்த ஆந்திர பிரதேசம், கேரளம்,கர்நாடகா ஆகிய பிரிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு கோரிக்கை வலுவானது. 1956 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி , மெட்ராஸ் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றக்கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுதந்திர போராட்ட தியாகியான சங்கரலிங்கனார், விருதுநகரில் தனது வீட்டின் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். போராட்டத்தை கைவிடுமாறு காமராஜர், மா.பொ.சி அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினார். ஆனால் மறுத்துவிட்டார். 76 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார், அக்டோபர் 13 ஆம் நாள் தமிழ்நாட்டிற்காக உயிரைக் கொடுத்து விட்டார்.
சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகம் மா.பொ.சிவஞானம் உள்ளிட்டோரின் குரல்கள், தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை தீவிரமாக்கியது
தீர்மானம்:
பின்னர், 1961 ஆம் ஆண்டு சட்டசபையில் மீண்டும் தீர்மானமானது, சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சின்னதுரை என்பவரால் கொண்டுவரப்பட்டது. ஆனால், அப்போது தீர்மானம் மீதான விவாதமானது ஒத்திவைக்கப்பட்டது. இதை எதிர்த்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 3 நாட்கள் புறக்கணிப்பு செய்து அழுத்தத்தை கொடுத்தனர். இதையடுத்து, அப்போதைய காங்கிரஸ் முதலமைச்சர் காமராஜர், தமிழ்நாடு என நிர்வாக கடிதங்களில் குறிப்பிட ஒப்புதல் அளித்தார்.
மேலும் 1961ஆம் ஆண்டு, மாநிலங்களவையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பூபேஷ் குப்தா , தமிழ்நாடு என பெயர் மாற்றக் கோரி மசோதாவை தாக்கல் செய்தார். ஆனால், ஆதரவு இல்லாமல் தோல்வியடைந்தது.
இதனை தொடர்ந்து, 1964 ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த அரங்கண்ணல் கொண்டு வந்த தீர்மானமும் தோற்கடிக்கப்பட்டது.
அறிஞர் அண்ணா தீர்மானம்:
இதையடுத்து, 1967 ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக பொறுப்பேற்ற அறிஞர் அண்ணா தலைமையிலான அரசு, 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு , காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து, 1969 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு என்றால், தனிநாடா என்று பலர் அச்சப்பட்டபோது, பல எதிர் கருத்துகள் வந்தபோதும், தமிழ்நாடு என்றால் தனிநாடு இல்லை, அது ஒரு நிலப்பரப்புக்கான பெயர் என்றும், அம்மக்களின் உணர்வு என்றும், வரலாற்று ரீதியான அடையாளங்கள் என்றும் கருத்துகள் கூறப்பட்டன.
Tamilnadu Day: ராமசாமி முதல் ராமானுஜன் வரை.. உலகம் போற்றும் தமிழர்கள்!