ஒவ்வொரு மனிதருக்கும் சொந்த வீடு திரும்பும்போது எப்படி நிம்மதி இருக்குமோ, அதேபோல ஒவ்வொரு தமிழனுக்கும் தாய்வீடான தமிழ்நாடு என்பது நிம்மதியாகும். அப்பேற்பட்ட நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று எளிதில் பெயர் கிடைக்கவில்லை.


தமிழர்களின் அடையாளமான இந்த தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்று ஒரு தியாகி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து போராடி உயிர்நீத்த பிறகே மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. இதற்காக போராடி உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனார்(Sankaralinganar).


யார் இந்த சங்கரலிங்கனார்?


கர்மவீரர் காமராஜரை தந்த விருதுநகர் மாவட்டம் தந்த மற்றொரு மாணிக்கம் சங்கரலிங்கனார். விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு கிராமத்தில் பிறந்தவர் சங்கரலிங்கனார். காமராஜர் படித்த சத்ரிய வித்யாலயா பள்ளியில் படித்தார். சிறு வயது முதலே காந்தியின் கொள்கைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டு, காங்கிரஸ் மீது மிகுந்த பற்று கொண்டவராக திகழ்ந்தார்.


ராஜாஜி உள்ளிட்ட அப்போதைய காங்கிரஸ் மற்றும் சுதந்திர போராட்ட தலைவர்களுடன் நெருக்கத்தில் இருந்த சங்கரலிங்கனார் தண்டி யாத்திரையிலும் பங்கேற்ற பெருமைக்கு சொந்தக்காரர்.


தமிழ்நாடு பெயர் கோரிக்கை:


தமிழ்மொழி மீதும், தமிழ் மண்ணின் மீதும் தீராப்பற்றுக் கொண்ட சங்கரலிங்கனார் ஆங்கிலேயர் ஆட்சியில் மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டு இருந்த நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று விடாப்பிடியுடன் இருந்தார். மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதத்தை தொடங்க முடிவு செய்தார்.


சுதந்திர இந்தியாவில் காங்கிரசின் ஆட்சியில் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி 1956ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உண்ணாவிரத்தை  தொடங்கினார். தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமின்றி மேலும் 11 கோரிக்கைகளை வலியுறுத்தினார்.


12 கோரிக்கைகள்:



  • மொழி வாரி மாநிலங்கள் அமைக்க வேண்டும்.

  • மெட்ராஸ் ஸ்டேட் (சென்னை ராஜ்ஜியம்) என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு எனப் பெயரிட வேண்டும்.

  • ரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் சமமாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை அளிக்கக்கூடாது.

  • அரசுப்பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் ஆடை அணிய வேண்டும்.

  • அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களை போல எளிமையாக வாழ வேண்டும். ஆடம்பர செலவுகள் செய்யக்கூடாது.

  • தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும்.

  • மாணவர்களுக்கு தொழிற்கல்வி அளிக்க வேண்டும்.

  • நாடு முழுவதும் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்.

  • விவசாயிகளுக்கு விளைச்சலில் 60 சதவீதம் அளிக்க வேண்டும்.

  • இந்தியை மட்டும் மத்திய அரசு அலுவல் மொழியாக பயன்படுத்தக்கூடாது

  • பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதை தடுக்க வேண்டும்.


உயிர்நீத்த தியாகி:


இந்த 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனாரிடம், அவரது உடல்நிலை கருதி போராட்டத்தை கைவிடும்படி மாபெரும் தலைவர்களான ஜீவானந்தம், கக்கன், மா.பொ.சிவஞானம், அண்ணா ஆகியோர் வலியுறுத்தினர். ஆனால், தனது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டேன் என்று விடாப்பிடியாக இருந்த சங்கரலிங்கனார் உடல்நிலை மிக மோசமான நிலையை எட்டியது.


இதையடுத்து, 1956ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி அவரை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்றும் சிகிச்சைக்கு ஒத்துழைக்காத சங்கரலிங்கனார் 13-ந் தேதி அக்டோபர் மாதம் 1956ம் ஆண்டு காலமானார். அவரது உடல் மதுரை மாவட்டத்தில் உள்ள தத்தனேரியில் அடக்கம் செய்யப்பட்டது.


தமிழ்நாடு பெயர்:


சங்கரலிங்கனாரின் மறைவுக்கு பிறகு அவரது கோரிக்கையை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டது. 1962ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தனி மசோதா கொண்டு வந்தபோதிலும், 1964ம் ஆண்டு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றிய போதிலும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அண்ணா பதவியேற்ற பிறகுதான் சங்கரலிங்கனாரின் கோரிக்கைக்கு உயிர் கொடுக்கப்பட்டது.  1968ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மறைந்த முன்னாள் முதலமைச்சர் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய நாள் தமிழ்நாடு நாள் என்று தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் 1968ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நிறைவேறிய பிறகு, 1969ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


இன்று நாம் பெருமையோடு மார்தட்டிக் கொள்ளும் தமிழ்நாடு என்ற அடையாளத்திற்காக உயிர்நீத்த சங்கரலிங்கனாரை தமிழ்நாடு நாளில் நினைவு கூறுவோம்.