“சேலத்துக்கு எஃகு ஆலை இல்லை என்கிறீர்கள். அண்ணாதுரை அங்கு எழுகிறான்! தூத்துக்குடிக்கு அபிவிருத்தி கிடையாது என்று கூறுகிறீர்கள். உடனே திமுக அங்கே எழுச்சியோடு மக்களைத் திரட்டுகிறது.  எனவே, கூட்டாட்சி முறையை ஒற்றையாட்சி முறையாக்கும் முயற்சிக்குக் கிளம்பியுள்ள எதிர்ப்பின் ஈட்டி முனைதான் திமுக என்று கொள்ள வேண்டும்” ஒற்றையாட்சி முறைக்கான முயற்சிக்கு எதிராக 1963 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முழங்கிய அண்ணாவின் உரையில் கனன்று தெறித்த கருத்துகள் இவை!



பேரறிஞர் அண்ணா


தேசிய இனங்களின் தேவையும், உணர்வும் தெளிவறப் புரியாத  60 களிலேயே, அதற்கான அரசியலை ஆழங்கால்படப் பேசி ஆதிக்கபுரியினரை அலறவிட்டவர் அண்ணா.


எதற்காக இதைப் பேசினார்?


திராவிட நாடு கோரிக்கையையும், திமுகவையும் குறிவைத்து அன்றைய ஒன்றிய அரசு பிரிவினைவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்த போது, அது குறித்த விவாதத்தில் பங்கேற்று, தங்களது அரசியலை வடவர்களுக்கு விரிவாகவே எடுத்துரைத்தார். அந்த விவாதத்தில், இடதுசாரிகளில் அப்போதைய மூத்த தலைவரான பூபேஷ் குப்தாவின் இறையாண்மை அச்சத்தையே விமர்சிக்கும் அண்ணா, ஒன்றிய அரசு என்பதும், அதில் பிராந்தியங்களுக்கான உரிமை என்னவாக இருக்க வேண்டும் என்பதையும், சோவியத் யூனியனை சான்று காட்டி விளக்கி இருக்கிறார்.



அண்ணாவுடன் கலைஞர்


“சில உறுப்பினர்கள் திரும்பி என்னைக் கேட்பார்கள். ‘ஆனால் நீ பிரிவினை பற்றி அல்லவா பேசுகிறாய்’ என்று. ‘அதை நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாது’ என்கிறார் பூபேஷ் குப்தா. மற்றவர்கள் அறிந்திரா விட்டாலும் கூட, சோவியத் யூனியனின் அரசியல் சட்டம் பூபேஷ் குப்தாவுக்குத் தெரிந்திருக்க வேண்டும். பிராந்தியங்கள் பிரிந்து போகும் உரிமையை அது அளிக்கிறது. ஆனால், அது இறையாண்மைக்கு ஆபத்து வந்துவிட்டது என்று குய்யோ முறையோ எனக் கூச்சலிட்டுக் கொண்டிருக்க வில்லை.”


அண்ணாவின் இந்த விளக்கம் அந்த பிரச்சினைக்கானது மட்டுமன்று; அவரது ஒட்டுமொத்த அரசியல் திறட்சிக்கான தத்துவார்த்த உள்ளீட்டை வெளிப்படுத்தக் கூடியதுமாகும்.


ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பது பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை மழுங்கடித்து விடுமோ என்று மார்ச்சிய வாதிகளுக்கு இருந்த – இருந்துவரும் சிறு தயக்கமோ, குழப்பமோ கூட அண்ணாவுக்கு இல்லைதேசிய இனங்களின் (தமிழர்களின்) தன்னாட்சி, தன்னுரிமையே  மேலான அரசியல் இலக்கு என்பதில் எப்போதுமே அவர் சமரசம் செய்து கொள்ளவில்லை.


பின் ஏன், திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார் என்று இப்போதும் பலர் கேட்கின்றனர்?


நேரு அரசின் பிரிவினை வாதத் தடைச் சட்டத்தில் இருந்து இயக்கத்தையும், அதன் அரசியலையும் காப்பாற்ற கட்சியின் விதியில் சிறு திருத்தத்தை மேற்கொண்டார். அந்தத் திருத்தத்தைக் கூர்ந்து கவனித்தால், அவர் எந்தக் கோரிக்கையையும் கைவிட்டதாகக் கருத இடமில்லை. இனவிடுதலைக்கான, மேன்மைக்கான வியூகத்தைத் தகவமைத்திருக்கிறார் என்றே கொள்ள முடியும்.  


“தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும், இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றிற்குள், இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது” என்பதே கட்சியின் 2வது விதியில் மேற்கொள்ளப்பட்ட அந்தத் திருத்தம்.  இதில், அவரது உள்ளார்ந்த இனவிடுதலைக் கனவின் கனல், நீருபூத்த நெருப்பாகத் தகித்துக் கொண்டிருப்பதை உணரமுடியும்.


அப்படி என்றால், நேரு அரசின் மிரட்டலுக்கு அண்ணா அஞ்சி விட்டாரா? அந்த அளவிற்கு போர்க்குணமற்ற கொள்கை நோஞ்சானா அவர்? நிச்சயமாக இல்லை.



மொழிப்போரின்போது 


இந்தித் திணிப்பை எதிர்த்து நின்ற போது…


“இது மொழிப்போராட்டமல்ல. கலாச்சாரப் போர். எனவே அறவே விட்டுக் கொடுக்க முடியாது. ஒரு நாடு மற்றொரு நாட்டைக் கைப்பற்றுவதாயிருந்தால் ஒன்று படையெடுப்பின் மூலமோ, அல்லது வியாபாரத்தின் மூலமோ, அல்லது கலாச்சாரத்தின் மூலமோ – ஆகிய இம்மூன்று முறைகளின் மூலம்தான் கைப்பற்ற வேண்டும். இவற்றுள் வட நாட்டினர் மூன்றாவது அதாவது கலாச்சாரத்தின் மூலம் ஒரு நாட்டைக் கைப்பற்றும் முறையைத் துவங்கி உள்ளார்கள். எனவே சகித்திருந்தது போதும். வாதாடிப் பார்த்ததும் போதும். இனியும் தமிழர்கள் பொறுக்க மாட்டார்கள். இனிப் போர்; போர் ; போர் ; போர் ; போர் தொடுப்பது தவிர வேறு வழி இல்லை. இன்றைய அரசாங்கத்திற்கு போர் தவிர வேறு எதுவும் புத்தி கற்பிக்காது…” என்று சொல்வாள் சுழற்றி, களம் கண்டவர் சுணங்கினார் என்று எப்படிக் கூறமுடியும்?


பின் ஏன் சற்றே தயங்கிப் பின்னடைந்தார்?


அந்த மாற்றம்தான் தமிழர்கள் எல்லோர்க்கும் அண்ணனாகவும், இல்லார்க்கும் செல்வனாகவும் வரலாற்றில் அவர் பரிணமிக்கக் காரணமாக அமைந்தது. ஒன்று – இன்று வரை தமிழர்களின் தன்னுரிமை பேசும் கருத்துக் கனலை அணையாமல் காத்துவரும் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பேரியக்கத்தை அழித்தொழித்து விட வேண்டும் என்ற தத்துவார்த்த எதிரிகளின் வியூகத்தில் (பிரிவினைவாத இயக்கம் என்ற பிரச்சாரம்) இருந்து அந்த இயக்கத்தைத் தப்பிப் பிழைக்க வைத்தது.


இரண்டு – காலனியாதிக்கத்திடமிருந்து வல்லாதிக்க நாடுகளிடம் அடக்குமுறை அதிகாரம் கைமாறிக் கொண்டிருந்த மூன்றாம் உலகத்தின் அரசியல் சூழலுக்கு ஏற்ப, தன் இனத்தின் அரசியல் போராட்ட அணுகுமுறையைத் தகவமைத்து, இன்றுவரை உயிர்ப்பும், தன்னூக்கமும் குறையாமல் இயங்க வழி வகுத்தது.   


ஒருவேளை திராவிட இயக்கத்தின் வேலைத் திட்டத்தையும், இயங்கு திசையையும் இப்படி சற்றே திருத்தி அமைக்காமல் போயிருந்தால், தமிழகத்தின் பிற்காலம் வேறு மாதிரியாகக் கூட இருந்திருக்கலாம். 50 களில் அறவழியில் தொடங்கப்பட்ட ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டம், காலப்போக்கில் எத்தகைய மாற்றங்களையும், சிக்கல்களையும் எதிர்கொண்டது என்பதை நாம் அறிகிறோம்.


ஆனால், தாய்த் தமிழகத்தைப் பொறுத்தவரை, அண்ணாவின் தீர்க்க தரிசனம், அதன் அரசியலை காலத்திற்கேற்றவாறு வடிவமைத்தது. இந்தி எதிர்ப்பு என்ற வடிவில், சற்று வன்முறை கலந்த  தன்னுரிமைப் போராட்டமாக முகிழ்த்த உணர்வை, அழுத்தமான ஜனநாயக அரசியல் உந்து சக்தியாக மாற்றினார் அண்ணா. (இலங்கையில் 50 களில் ஜனநாயக வடிவில் உருவெடுத்த தமிழர்களின் தன்னுரிமைப் போராட்டம், பின்னாளில் ஆயுதப் போராட்டமாக வடிவெடுத்தது. அதே 50 களில் தமிழகத்தில் வன்முறைப் போக்குடன் வெடித்த இந்தி எதிர்ப்பு என்ற தன்னுரிமைப் போராட்டம், பின்னாளில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஜனநாயக வடிவமாக மாற்றம் கண்டது. )


மூன்றாம் உலகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் வடிவமாக பரவலாகி நிலைபெறத் தொடங்கிய, ஜனநாயக கூட்டாட்சி அமைப்புக்குள் ஊடுருவி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே, காலத்துக்கு ஏற்ற அரசியல் போராட்ட நகர்வாக இருக்கும் என அண்ணா தீர்மானித்தார். இத்தகைய அரசியல் தகவமைப்புகளின் மூலமாக, இந்தி எதிர்ப்பு என்ற முழக்கத்துடன், தமிழ்ச் சமூகத்தின் மனப் பரப்பு முழுவதும் கிளர்ந்தெழுந்த தேசிய இன உணர்ச்சியை, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஜனநாயக பேரரசியல் வடிவமாக உருமாற்றி இருக்கிறார் அண்ணா.


சென்னை ராஜதாணியாக இருந்த தமிழ் மண்ணின் பெயர், தமிழ்நாடு என்று மாற்றம் பெற்றது முதல், சாதி மறுப்புத் திருமணத்துக்கு சட்டரீதியான அங்கீகாரம்,  69 சதவீத இட ஒதுக்கீடு வரையிலான பல்வேறு சாதனைகளை, இத்தகைய கூட்டாட்சி அமைப்பின் அதிகாரத்தைக் கைப்பற்றியதன் மூலமாகத்தான் தமிழர்கள் பெற முடிந்தது.   மதம், சாதி, வர்க்க ஏற்றத் தாழ்வு என எல்லாமே கலந்து கட்டி இறுகிய மிகச் சிக்கலான சமூகத்தை அரசியல் படுத்துவது அத்தனை எளிதல்ல. அதனை சண்டமாருதமாக சவுக்கடி கொடுக்கும் வேகத்தில் பெரியார் மேற்கொண்டார் என்றால், தவழும் தென்றலாக எதிரிகளையும் தன் வசப்படுத்தும் தன்மையான அரசியலை அண்ணா கையிலெடுத்திருக்கிறார்.



தந்தை பெரியாருடன் பேரறிஞர் அண்ணா


உலகிலேயே, இனவழி உரிமைப் போராட்டத்தை, வீழ்த்த முடியாத அரசியல் அதிகார வலிமை பெற்ற ஜனநாயகப் பேராற்றல் கொண்ட அமைப்பாக மாற்றிய சாதனையை அண்ணா மட்டுமே நிகழ்த்திக் காட்டி உள்ளார்.  “I belong to the Dravidian stock” என்ற தன்னறிமுகத்துடன் அண்ணா அன்று பிரகடனம் செய்த கருத்துகள் அனைத்தும் இன்று தேசிய அளவிலான பேசுபொருள் ஆகியிருக்கின்றன. 60 ஆண்டுகளு்க்குப் பின்னர்தான் நமது உணர்வுகள் அவர்களுக்கு லேசாகப் புரியத் தொடங்குகிறது.


சமூகநீதி என்ற கருத்தாக்கம் இன்று இந்திய ஒன்றிய அளவில், வெகுசனத் தளத்தில் விவாதப் பொருளாகி இருக்கிறது.  அனைத்திந்திய அளவில் அதற்கென்று ஓர் அமைப்பை முன்னெடுக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சிக்கு பரவலான ஆதரவும், கவனமும் கிட்டுகிறது.



முதல்வர் மு.க.ஸ்டாலின்


தன்னாட்சியும், தமிழாட்சியும் நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாதவை என்ற அண்ணா காலத்து இறுக்கம் இப்போது நெகிழத் தொடங்கி இருக்கிறது. மாநில அரசுகளைக் கலைத்தே பழக்கப்பட்ட காங்கிரஸ், இப்போது மாநில உரிமைகளைப் பேசுகிறது. ஆனால், ஆளும் கட்சியின் போக்கு அதற்கு நேர்மாறாக உள்ளதே என நமக்குத் தோன்றலாம்.  கல்வி, வரிவருவாய், மின்னாளுமை எனத் தொடங்கி இப்போது பத்திரப் பதிவு வரை ஒரே நாடு முழக்கத்தின் மூர்க்கம் நீண்டு வருவதை மறுப்பதற்கில்லை. ஆனால், இவை அனைத்துமே தமிழ் இனத்தைப் போலவே, இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள பிற தேசிய இனங்களின் எழுச்சியை விரைவு படுத்தவே வழி வகுக்கும்.


அழுத்தம் அதிகரிக்கும் போது, விம்மலும், திமிறலும் தானாகவே வெடித்தெழும் என்பதுதானே இயங்கியல் விதி!  எனினும், அண்ணா இந்த மண்ணுக்குக் கற்றுத் தந்து சென்றிருக்கும் அரசியல் பண்பு, ஜனநாயக நெறியில் இருந்து சற்றும் வழுவாமலே நமக்கான உரிமைகளைப் பெறுவதற்கான வலிமையை நமக்குத் தரும் என்பதில் அய்யமில்லை.  அதனால்தான் அவர் நமக்கு அண்ணா!


 


- கட்டுரையாளர் : திரு. மேனா. உலகநாதன், மூத்த பத்திரிகையாளர், திராவிட இயக்க பற்றாளர்


   தொடர்புக்கு : menaulaganathan@gmail.com