கொரோனா வைரஸை தடுப்பதற்காக தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கானது 28/06/2021 காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அறிவிப்பு தொடர்பான அறிக்கையும் வெளியாகியுள்ளது.
அதில், நோய் பரவல் தாக்கத்தை பொறுத்து மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டு ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
வகை 1 -ல் 11 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன அவையாவன:
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்
வகை 2 -ல் 23 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன அவையாவன:
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்
வகை 3 -ல் 4 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன அவையாவன:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்
வகைப்படுத்தப்பட்ட மாவட்டங்களுக்கான போக்குவரத்து தளர்வுகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
வகை -1
இதில் வகைப்படுத்தப்பட்டுள்ள 11 மாவட்டங்களுக்கு முன்னதாக அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து நடைபெறும்.
வகை -2
வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ - பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் வாடகை டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர 3 பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வகை -3
குழந்தைகள், சிறார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பெண்கள், விதவைகள்ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் இவை தொடர்புடைய போக்குவரத்து இ - பதிவு இல்லாமல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிறார்களுக்கான கண்காணிப்பு/ பராமரிப்பு, சீர்த்திருத்த இல்லங்களில் பணிபுரிவோர் இ- பதிவில்லாமல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது
மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இ பதிவுடன் அனுமதிக்கப்படுவர்.
மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, குளிர்சாதன வசதி இல்லாமலும் 50 % இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மெட்ரோ இரயில் போக்குவரத்து, 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிடையே பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ - பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும் ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.