காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ளது திருப்புலிவனம் கிராமம் இக்கிராமத்தில் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினரால் சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கும் நிலத்தின் எல்லையை குறிக்கும் 15-ஆம் நூற்றாண்டை சார்ந்த அரியவகை சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அரியவகை 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூலக்கல் விஜயநகர மன்னர்களின் காலத்தைச் சேர்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லின் இடதுபக்கம் சூல சின்னம் அதன்கீழ் பன்றி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. வலப்பக்கத்தில் பெரிய உருவத்தில் கழுதையும் அதன் கீழ் பெரிய புறா உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது, எங்களது கள ஆய்வில் திருப்புலிவனத்திலிருந்து மருதம் செல்லும் சாலையில் இந்த இரண்டு கற்களை கண்டறிந்தோம்.  இது விஜயநகர மன்னர்களின் காலத்தை சார்ந்ததாகும் 50செ.மீ. அகலமும் 75 செமீ உயரமும் கொண்ட ஒரு கல்லும் அதன் அருகில் 35 செ.மீ அகலமும் 70செ.மீ உயரமும்  கொண்ட மற்றொரு கல்லும் உள்ளது இதில் கல்லின் இடதுபக்கம் சூலச் சின்னமும் அதன்கீழ் பன்றி உருவமும் உள்ளது இது விஜய நகர மன்னர்களின் சின்னமாகும்.வலப்பக்கத்தில் பெரிய உருவத்தில் கழுதையும் அதன் கீழ் பெரிய புறா உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இது குலச்சின்னமாக இருக்க வாய்ப்புள்ளத இது 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது.



மன்னர் காலங்களில் சிவன் கோயிலுக்கு தானமாக வழங்கப்படும் நிலங்களுக்கு அதன் எல்லையை குறிப்பதற்காக நான்கு திசைகளில் சூலச்சின்னம் பொறித்த கற்களை நட்டு வைப்பார்கள் இதற்கு சூலக் கற்கள் என்று பெயர்.இந்நிலங்களுக்கு வரியை நீக்கி இறையிலி நிலங்களாக ஆலயங்களுக்கு மன்னர்கள் வழங்கினார்கள். இது ஆலய நிதி வருவாய்க்கான ஏற்பாடாக இருந்தது இதன் மூலம் அன்றாட பூசைகள் செய்தல் விளக்கெரித்தல் அமுது படைத்தல் மற்றும் ஆலயபராமரிப்பு பணிகள் முதலியவை மேற்கொள்ளப்பட்டன. 



இவ்வூரில் பல்லவர்கள் காலத்தை சேர்ந்த புகழ்பெற்ற சிவன் ஆலயம் திருப்புலிவனமுடைய நாயனார் எனும் வியாக்ரபுரீஸ்வரர்  ஆலயம் உள்ளது. எனவே இது இவ்வாலயத்திற்கு கொடுத்த நிலத்தின் எல்லையைக் குறிக்கும் சூல கற்களாக இருக்க வாய்ப்பு உள்ளது . இவ்வூர் மக்கள் இதை  இன்றும் எல்லைக்கல் என்றே அழைக்கிறார்கள். திருவிழாக்காலங்களில் இதை வழிபட்டும் வருகிறார்கள்.

இந்தக் கோயிலுக்கு விஜயநகர மன்னர்கள் பல்வேறு கொடைகளை வழங்கியுள்ளனர். இவர்களது கலைப்பாணியில் உருவான சிம்ம தட்சிணாமூர்த்தியும் கோயிலின் நுழைவு வாயில் அருகே இருக்கும் கல் தேர் சர்க்கர மண்டபமும் மிகவும் பிரசித்தி பெற்றது



”தமிழகத்தில் இதுவறை கண்டெடுக்கப்பட்ட சூலக்கற்களில் கழுதை மற்றும் நாயின் உருவம் இடம் பெற்றிருக்கவில்லை ஆனால் இதில் இடம்பெற்றிருப்பது அரியதாகவே கருத வேண்டி உள்ளது. விஜயநகர மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்த புறா  மற்றும் கழுதையை குலச்சின்னங்களாக கொண்டவர்கள் இந்த கோயிலுக்கு நிலம் வழங்கியதாக இருக்கக்கூடுமோ என கருதுகிறோம். மேலும் இதுகுறித்து  தொடர்ஆய்வில் உள்ளோம் கடந்த கால வரலாற்றை நிகழ்காலத்திற்கு பறைசாற்றும் இவ்வகை அரிய வரலாற்றுப் பொக்கிஷங்களை காத்திடுவது காலத்தின் கட்டாயமாகும்  எனவே இதில் தமிழகத் தொல்லியல் துறைஉரிய  கவனம் செலுத்தி பாதுகாத்திட வேண்டும்” என அவர் தெரிவித்தார்.



 

காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்துள்ள உத்தரமேரூரில் தொடர்ந்து மிகத்தொன்மையான தொல்லியல் சார்ந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.