தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டாததால், தற்போது மின் தடை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி இருந்தார். தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், மின்சார வாரியத்திற்கு ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 671 ரூபாய் கடன் உள்ளதாகவும், கடந்த ஆட்சியில் நடைபெற்ற கொள்முதல் விவகாரங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் எனவும் செந்தில் பாலாஜி கூறி இருந்தார். 



தமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல. நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்தால்தான் அது மின்மிகை மாநிலம். கடந்த ஆட்சியில் மின் மிகை மாநிலம் என்று அழைத்தார்கள் ஆனால் விவசாயிகளுக்கு மின்சாரம் தரவில்லை. தமிழகம் மின்மிகை மாநிலம் அல்ல, அனைத்திற்கும் சட்டமன்றத்தில் பதில் தரப்படும் என கூறியிருந்தார். 



இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கடந்த 9 மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை என்ற செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் தடையை மறைக்க காரணம் தேடி வருவதாக குற்றம்சாட்டியுள்ள முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மின் தடை ஏற்பட்டாத வகையில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு புயல்கள் தாக்கி உள்ள போதிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு போர்க்கால அடிப்படையில் மின் பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு மின் விநியோகத்தை சீரமைத்து கொடுத்துள்ளதாக கூறி உள்ள அவர், பராமரிப்பு பணிகள் இல்லாமல் இருந்தால் கடந்த மே 2ஆம் தேதி வரை எப்படி மின்சாரம் வந்தது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


காற்றாலை மின்சாரம் 2 ஆயிரம் மெகாவாட் முதல் 4 ஆயிரம் மெகாவாட் வரை வந்து கொண்டிருக்கிறது, அப்படி இருந்தும் மின் தடை ஏற்படுகிறது என்றால் அதற்கான காரணங்களை ஆராயாமல் எங்கள் மீது குறை சொன்னால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என கூறியுள்ள தங்கமணி, சென்னையை பொறுத்தவரை மின்வடங்கள் நிலத்துக்கடியில் செல்லும் நிலையில் அங்கு ஏன் மின் தடை ஏற்படுகிறது என்பதை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களுக்கு விளக்க வேண்டும் என கேட்டுள்ளார். திமுக அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததே தமிழகத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதற்கான காரணம் என குற்றம்சாட்டியுள்ள தங்கமணி. எந்த மாநிலமும் தேவையான அளவிற்கு முழு மின்சார உற்பத்தியை அந்த மாநிலமே செய்வதில்லை எனவும், மற்றபடி தமிழ்நாடு மின் மிகை மாநிலம்தான் எனவும் விளக்கமளித்துள்ளார். மின் மிகை மாநிலம் இல்லை என கூறி தமிழகத்தில் மீண்டும் திமுக மின்வெட்டை ஏற்படுத்த முயற்சிக்கிறதா என்ற கேள்வியையும் முன்னாள் அமைச்சர் தங்கமணி எழுப்பி உள்ளார்