ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18ஆம் தேதி காவிரி தாயை போற்றும் வகையில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். ஆடிப்பெருக்கு என்பது இந்துக்களின் சிறப்பு வழிபாடு நாள் ஆகும். பெண்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள ஆறு மற்றும் குளங்களில் சென்று மாம்பழம், வாழைப்பழம், பேரிக்காய், உள்ளிட்ட பழ வகைகள் மற்றும் அரிசி உள்ளிட்டவைகளை வைத்து நீர்நிலைகளில் வணங்கி வழிபாடு நடத்தி தங்கள் கை மற்றும் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி மகிழ்ந்து வருவது வழக்கம்.

 

மேலும் விவசாயிகளும் இந்த நாளில் வழிபாடு நடத்தி சம்பா சாகுபடி பணிகளை தொடங்குவர்கள். இன்று நீர்நிலைகளுக்கு விதைகளை வைத்து படையலிட்டு விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் அந்த விதைகளை தெளிப்பார்கள். இதன்மூலம் பயிர்கள் அதிகம் விளைந்து விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் என்ற நோக்கத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இருந்த போதிலும் ஆறுகளில் எப்பொழுதும் உள்ள கூட்டத்தை விட அதிகளவில் ஆடிப்பெருக்கு விழாவில் கலந்துகொண்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

 

சிறப்புமிக்க இந்த ஆடிப்பெருக்கு விழாவினையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

 

கடந்த மூன்று ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக ஆடிப்பெருக்கு விழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. ஆண்டுதோறும் ஈரோடு மாவட்டத்தில் பவானி மற்றும் காவேரி ஆறு கூடும் இடமான கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா விசேஷமாக கொண்டாடப்படும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கொண்டாடவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டும் அந்த வரலாறு சிறப்புமிக்க இடத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக நடைபெறவில்லை. இதனால் அப்பகுதி பெண்கள் தத்தம் தங்கள் வீடுகளிலேயே தாலி மாற்றி சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். 

 

அதேபோல், திருச்சி காவேரி கரையோரம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அதிக அளவில் பொதுமக்கள் நீராடி வருகிறார்கள். தாலியைப் பிரித்து கோர்ப்பது மற்றும் திருமண ஆகாத பெண்கள் ஆண்களுக்கு பரிகாரம் செய்வது என தொடர்ந்து பொதுமக்கள் ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபத்தில் பூஜை நடத்திய பிறகு காவேரி ஆற்றில் நீராடி வருகிறார்கள். 


திருவாரூர் அருகே மாங்குடி பகுதியில் ஓடும் பாண்டவையாற்றில் அதிகாலை முதல் ஏராளமான பெண்கள் ஆடிப்பெருக்கு விழாவை ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.