• கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த மூவர் உயிரிழப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்!




கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். 




  • நீட் தேர்வுக்கு எதிராக திமுக ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம்




நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் ஜூன் 24-ல், சென்னை, வள்ளூவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாணவர் அணி அறிவித்துள்ளது, இதுதொடர்பான அறிக்கையில், நீட் தேர்வே தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதற்காக நிறைவேற்றி அனுப்பியிருக்கும் சட்ட மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டுமென்றும், நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய மோசடிகளை, குளறுபடிகளை களைவதற்கு மேல்நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது




  • வெளியான பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள்




12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் மாற்றம் கொண்ட மாணவர்களின் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. கடந்த மே 6ஆம் தேதி வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றனர்.மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ தங்களது பதிவெண்‌ மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.




  • அமேசான் டெலிவெரியில் வந்த விஷ நாகம் - இணையத்தில் பரவும் வீடியோ 




பெங்களூருவில் சர்ஜாபூர் சாலையில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் ஆன்லைன் வர்த்தக தளமான அமேசானில் கேம் விளையாட ஜாய்ஸ்டிக் ஆர்டர் செய்திருந்தனர். தொடர்ந்து டெலிவரி செய்யப்பட்ட பெட்டியை ஆவலுடன் பெற்றுள்ளனர். இருப்பினும், அந்த பெட்டியின் டேப்பில் பாம்பின் தோல் மாதிரி ஒட்டிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே திறந்து பார்த்தால் பாம்பு இருந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலான் நிலையில் அமேசான் நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது.