காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் அருகே பனையூர் பகுதியில் வசித்து வருபவர் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ரவி. இவர் கட்டிட மேஸ்திரியாக இருந்து வருகிறார். இவரது மனைவி சித்தாளாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஒரகடம் பகுதியில் பானிபூரி கடை வைத்திருக்கும் மணிகண்டன் என்பவருக்கும் ரவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரவி வீட்டிற்கு அடிக்கடி மணிகண்டன் சென்று வந்துள்ளார்.


திருமண தாண்டிய உறவு


ஆரம்ப காலகட்டத்தில் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது வளர்ந்து  ரவி மனைவி மணிமேகலைக்கும், மணிகண்டனுக்கும் சில மாதங்களாக திருமண தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி மணிமேகலையை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு சென்று தனிமையில் இருந்துள்ளார். மணிமேகலை மற்றொரு ஆணுடன் வெளியில் சுற்றுவது குறித்து கிடைத்துள்ளது.  இதனை அறிந்த ரவி தனது மனைவி மணிமேகலையை கண்டித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரகடம் சென்று மணிகண்டனின் கடைக்கு சென்று மணிகண்டனிடம் சண்டையிட்டுள்ளார்.


ரவியை சும்மா விடக்கூடாது


இதனைக் கண்ட மணிகண்டனின் சகோதரர் கோபி அருகில் உள்ள குட்டைப் பகுதிக்கு ரவியை அழைத்து சென்று ரவியை சமாதானப்படுத்தி பேசி கொண்டிருந்தார். தனது உறவு தெரிந்த ரவியை சும்மா விடக்கூடாது என எண்ணி ரவியும் கோபியும் பேசிக்கொண்டு இருந்த போது, மணிகண்டன் உருட்டுக்கட்டையால் பலமாக தாக்கி உள்ளார். சுதாரித்து எழுந்த ரவி, மணிகண்டன் மற்றும் கோபி என இருவரையும் தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து உருட்டுக்கட்டை மற்றும் கல்லைக் கொண்டு ரவியை பலமாக தாக்கியதில் ரவி ஏரிக்கரையிலே ரத்த வெள்ளத்தில் துடித்து இறந்தார்.


கைது செய்து விசாரணை


அதனைத் தொடர்ந்து கோபி மற்றும் மணிகண்டன் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஒரகடம் போலீசார் உயிரிழந்த ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரவியை கொலை செய்த இருவரில் கோபியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர். திருமணம் தாண்டிய உறவை தட்டி கேட்க சென்ற கணவனை, அண்ணன் தம்பி இருவர் கொலை செய்த சம்பவம் ஒரகடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


காவல்துறையிடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது : தகாத உறவு காரணமாக இந்த கொலை சம்பவம் அரங்கேறி இருக்கிறது என விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருமணம் தாண்டி தனது மனைவியுடன் உறவு வைத்துக் கொண்டிருந்த, நண்பனை கணவன் கண்டித்துள்ளார். இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் இந்த கொலைச் சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைவர் உள்ள மற்றொரு குற்றவாளியும் விரைவில் கைது செய்யப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.