மத்திய பட்ஜெட்டிற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. ஆர்ப்பாட்டம் - எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
மு.க.ஸ்டாலினின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், திருநெல்வேலி என தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தி.மு.க.வினர் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு போதியளவு நிதி ஒதுக்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
அதிமுக ஒன்றிய குழுத்தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் - திமுக வார்டு கவுன்சிலர்கள் ஆதரவு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக ஒன்றிய குழுத்தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மாணத்தில் திமுக வார்டு கவுன்சிலர்கள் ஆதரவு.
Mettur Dam: 100 அடியை எட்டியது மேட்டூர் அணை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து 1.20 லட்சம் கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு தமிழகத்திற்கு வந்து கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 1.15 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை இன்னும் ஓரிரு நாளில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மத்திய நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Karthi Chidambaram: ”வேடிக்கையா இருக்கு” ஈ.வி.கே.எஸ் எனது முழு உரையை கேட்டாரா? - கார்த்தி சிதம்பரம்
Karthi Chidambaram Reply to EVKS: கூட்டணிக்கு எதிராக சுயநலமாக பேசி வருவதாக ஈ.வி.கே. எஸ் இளங்கோவன் தெரிவித்த நிலையில், கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்பு பேசியதற்காக, தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே. எஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்திருப்பது வியப்பாக உள்ளது. என்னுடைய முழு உரையை கேட்டாரா இல்லையா என்று தெரியவில்லை. அவருடைய நீண்ட அரசியல் பயணத்தில், நிறைய ஏற்ற இறக்கங்களை பார்த்திருப்பார். அதனால், அவருடைய கருத்துக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை என எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
இதுதான் முதலமைச்சரை நடத்தும் விதமா? எதிர்க்கட்சிகளை எதிரிகளாக நடத்தாதீர்கள்!- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டெல்லி ராஷ்டிரபதி பவன் கலாச்சார மையத்தில் 9வது நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் இன்று (ஜூலை 27) நடைபெற்று வருகிறது. நிதி ஆயோக் கூட்டத்தில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் முதல்வர்கள் பங்கேற்றுள்ள நிலையில், இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணித்தனர்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த மம்தா, ‘’மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்று கூறினேன். நான் பேச விரும்பிய நிலையிலும் 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். தொடர்ந்து என்னைப் பேச அனுமதிக்கவில்லை. என்னுடைய மைக் ஆஃப் செய்யப்பட்டது,10- 20 நிமிடங்கள் மட்டுமே நாம் பங்கேற்றேன்’’ என தெரிவித்தார். இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச அனுமதிக்கப்படாததற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ''இதுதான் கூட்டாட்சித் தத்துவமா? இதுதான் முதலமைச்சரை நடத்தும் விதமா? நம் ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதியே எதிர்க் கட்சிகள் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும். அமைதிப்படுத்த வேண்டிய எதிரிகளாக நடத்தக்கூடாது. கூட்டாட்சி முறை விவாதத்தைக் கோருகிறது. அனைத்துக் குரல்களையும் மதிக்கிறது'' என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.