மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த ஆட்சி நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவுடன் நடைபெற்று வருகிறது. கடந்த 23ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.


தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்:


மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், தமிழ்நாடு என்ற வார்ததையே பட்ஜெட்டில் ஒதுக்கப்படவில்லை என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் மாற்றந்தாய் மனப்பான்மையை கண்டித்து வரும் 27ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.


மு.க.ஸ்டாலினின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், திருநெல்வேலி என தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தி.மு.க.வினர் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு போதியளவு நிதி ஒதுக்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.


கனிமொழி தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும், தயாநிதி மாறன் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் என எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் தங்களது தொகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.தமிதமீ


மாற்றாந்தாய் மனப்பான்மை:


மத்திய அரசு பட்ஜெட்டில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதைக் கண்டிக்கும் விதமாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து, டெல்லியில் இன்று நடந்து வரும் நிதி ஆயோக் கூட்டத்தையும் புறக்கணித்துள்ளார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமின்றி தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சுக்குவும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். மேலும், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தை பயன்படுத்தாததற்கு தமிழ்நாட்டின் பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்தனர்.


பீகார் மற்றும் ஆந்திரா மாநில ஆளுங்கட்சிகளின் உதவியுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ள மத்திய பா.ஜ.க. அரசு அந்த மாநிலங்களுக்கு அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளது. இதனால், ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளும் பட்ஜெட் என்று இந்தியா கூட்டணியினர் விமர்சித்தனர். மேலும், இதை கண்டித்து கடந்த 24ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.