TN Govt Pongal Gift Package: பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான அரசாணையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்பு வழங்கப்படும் என  தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


பொங்கல் பரிசுத் தொகுப்பு:


பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ தைப்பொங்கல் 2024-ம் ஆண்டு குடும்ப அட்டைதத்தாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டு்ள்ளது. 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் வகையில் இரு நூற்று முப்பத்து எட்டு கோடியே தொண்ணூற்று இரண்டு லட்சத்து இரண்டாயிருத்து எழுநூற்று நாற்பத்து ஒன்று ரூபாய் (ரூ.238, 92, 72,741) செலவினம் ஏற்படும்.


கொள்முதல் செய்யப்பட உள்ள பச்சரிசி, கரும்பு, சர்க்கரை ரேஷன் கடைகள் மூலம் அனைத்து அரிசி பெறும் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும். கரும்பு ஒன்றுக்கு ரூ.33 கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரூ.1000 இல்லையா?


திமுக ஆட்சி அமைந்த பிறகு கடந்த 2022ம் ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு, இதேபோன்று ரேஷன் கடைகள் மூலம் பயனாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. ஆனால், அதில் இருந்த வெல்லம் போன்ற பொருட்கள் தரமற்றதாக இருந்ததாக கடும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பொங்கல் பரிசுத்தொகுப்பில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், உள்ளூர் உற்பத்தியாளர்களை தவிர்த்து விட்டு வெளியூர் நபர்களிடம் பொருட்களை வாங்கியது ஏன் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. திமுக அரசின் மீதான பெரும் கரும்புள்ளியாகவே இது மாறியது. முதலமைச்சரே இதற்கான விளக்கத்தையும் கொடுத்து இருந்தார். அதைதொடர்ந்து, இந்த விமர்சனங்களை தவிர்க்கும் விதமாக கடந்த ஆண்டு, பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கு பதிலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் மீண்டும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ரொகப்பரிசு தொடர்பான எந்தவித தகவலும் இடம்பெறவில்லை. அதோடு, பொங்கல் பரிசு எப்போது வழங்கப்படும் என்ற தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.