சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன் பாளையம் அடுத்துள்ள செங்கேணிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் முதியோர்களான கிருஷ்ணன் (71) மற்றும் கண்ணையன் (75). பட்டியலின சமூகத்தை சேர்ந்த இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது.
இவர்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதில் முதியவர்களின் சாதியை குறிப்பிட்டு சம்மன் அனுப்பப்பட்டது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சாதி பெயர் குறிப்பிட்டு சம்மன் அனுப்பியதற்கு புதிய தமிழகம் உள்பட பல கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ஏழை விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை:
அதோடு சாதி பெயரை குறிப்பிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இந்த விவகாரம் தற்போது பூதாகரமான நிலையில் சேலம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே, கிருஷ்ணன் மற்றும் கண்ணையன் ஆகியோர் வழக்கறிஞர்களுடன் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வங்கிக்கணக்கு, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களோடு ஆஜராகினர்.
அப்போது தாங்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடவில்லை என்றும் தங்களது வங்கி கணக்கில் ரூ.500 மட்டுமே உள்ளது என்றும் விவசாயிகள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு இந்திய வருவாய்த்துறை அதிகாரி பாலமுருகன் பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் மீது ஐஆர்எஸ் அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு:
சென்னையில் சரக்கு மற்றும் சேவை வரி மற்றும மத்திய கலால் வரி துணை ஆணையராக பணியாற்றி வரும் பாலமுருகன் எழுதியுள்ள கடிதத்தில், "தலித் சமூகத்தை சேர்ந்த ஏழை விவசாயிகளின் நிலத்தை பறிக்கும் நோக்கில் அவர்களின் சாதியை குறிப்பிட்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பாஜகவின் அங்கமாக அமலாக்கத்துறையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றிவிட்டார். எனவே, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என குற்றஞ்சாட்டியுள்ளார்.
"சேலம் மாவட்ட பாஜக பிரமுகர் அளித்த புகாரில் அவர்களுக்கு சம்மன் அனுப்பியது என்பது ஆச்சரியமளிக்கும் வகையிலும், கண்டிக்கும் வகையிலும் உள்ளது. அந்த முதியவர்கள் மீது குற்றம்சாட்டிய பாஜக பிரமுகர் மீது வழக்கு உள்ளது. தற்போது அவர் சிறைக்கு வெளியே இருந்தாலும் கூட அவரது புகாரில் சம்மன் அனுப்பியது அதிர்ச்சியளிக்கிறது. அமலாக்கத்துறை என்பது பாஜகவின் கைப்பாவை போல் செயல்படுவதை இது எடுத்துக்காட்டுகிறது" என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.