முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது ஆளுநர் ரவி தவறான தகவல்களை பரப்புவதாக, தமிழக அரசு சார்பில் உரிய ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


ஆளுநர் மாளிகை கொடுத்த விளக்கம்:


முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் கே.சி. வீரமணி உள்ளிட்டோர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ரவி அனுமதி அளிக்க வேண்டும் என, தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டு இருந்தது. அதற்கு பதிலளித்த ஆளுநர் மாளிகை, ஒரு சில வழக்குகளுக்கு சட்ட விளக்கம் கேட்டு இருப்பதாகவும், முன்னாள் அமைச்சர்கள் கே.சி. வீரமணி மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான கோப்புகள் எதுவும் தங்களுக்கு வரவில்லை என விளக்கமளிக்கப்பட்டு இருந்தது.


வெளியான ஒப்புகைச்சீட்டு:


இந்நிலையில், தமிழக அரசின் பொதுத்துறை சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஆளுநருக்கு எப்போதெல்லாம் கடிதம் வழங்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள் தொடர்பான கடிதத்தை ஆளுநரின் செயலாளருக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது. அதைதொடர்ந்து, கடந்த மே மாதம் 15ம் தேதி மீண்டும் ஆளுநரின் செயலாளருக்கு தமிழக அரசு சார்பில் நினைவூட்டல் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த இரண்டு கடிதங்களையும் பெற்றுக்கொண்டதாக ஆளுநர் மாளிகை வழங்கிய ஒப்புகை சீட்டுகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


தவறான கருத்துகள்?


முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஏற்கனவே உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு இருந்தாலும், அப்படி எந்த ஆவணங்களும் எங்களிடம் இல்லை என ஆளுநர் கூறுஇ இருப்பது சர்சசையை ஏற்படுத்தியுள்ளது. தேவையில்லாமல் ஆளுநர் ஏன் தவறான கருத்துகளை பொதுவெளியில் கூற வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


தொடரும் சர்ச்சை - டெல்லி பயணம்:


ஏற்கனவே தமிழக அரசு மற்றும் ஆளுநர் ரவி இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆளுநர் அநாவசிய கருத்துகளை கூறி அரசியல் செய்வதாக, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். அண்மையில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ரவி அறிவித்தார். தமிழ்நாட்டை சேர்ந்த பெரும்பாலான அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வெறும் 5 மணி நேரத்தில் தனது உத்தரவையே நிறுத்தி வைப்பதாக கூறினார். இதுபோன்று ஆளுநரின் செயல்கள் அடுத்தடுத்து சர்ச்சையாகி வரும் நிலையில் தான், இன்று அவர் டெல்லி புறப்படுகிறார். ஒருவாரம் வரை அவர் அங்கு தங்கியிருந்து முக்கிய சட்ட ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.