தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 10 ஆம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் ஏணா வானிலை மையம் தெரிவித்துள்ளது.


 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: 


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில்  லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  


கடந்த ஜூன் 8 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதனால் இந்தியாவில் அனேக மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளா, கர்நாடகா, தென் தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.


சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை இல்லை என்றாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை என்பது கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் எப்போதும் இல்லாத அளவு 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து, அதிகபட்ச வெப்பநிலை என்பது 34.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தொண்டி பகுதியில் 37.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (சென்டிமீட்டரில்)


அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம்) 14, சின்னகாலர் (கோயம்புத்தூர் மாவட்டம்), வால்பாறை பி.டி.ஓ (கோயம்புத்தூர் மாவட்டம்) 11, ஹாரிசன் மலையாள லிமிடெட், வொர்த் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்) 10, தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி மாவட்டம்) 8, சோலையார் (கோவை மாவட்டம்), சின்கோனா (கோயம்புத்தூர் மாவட்டம்), அப்பர் பவானி (நீலகிரி மாவட்டம்) தலா 7, தேவாலா (நீலகிரி மாவட்டம்) 6, பார்வூட் (நீலகிரி மாவட்டம்), வால்பாறை பிஏபி (கோவை மாவட்டம்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை மாவட்டம்), குண்டர் அணை (தென்காசி மாவட்டம்), நடுவட்டம் (நீலகிரி மாவட்டம்) தலா 5, வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர் மாவட்டம்), கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம்), அடவினைனார்கோயில் அணை (தென்காசி மாவட்டம்), ஹரிசன் மலையாள லிமிடெட். செருமுல்லி (நீலகிரி மாவட்டம்), மேல் கூடலூர் (நீலகிரி மாவட்டம்) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.