கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், அவரது மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


கடந்த 2009 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் இணைந்த விஜயகுமார்  காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த விஜயகுமார் கடந்த ஜனவரி மாதம் கோவை சரக டி.ஐ.ஜி-யாக மாற்றப்பட்டார்.  


இவரது கட்டுப்பாட்டின் கீழ் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் உள்ளது. இதனிடையே நேற்று இரவு துணை காவல் ஆணையர் சந்தீஷ் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இன்று காலை கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில்  வழக்கம்போல நடைபயிற்சி மேற்கொண்ட விஜயகுமார், தனது தனிப்பட்ட பாதுகாவலர் ரவியிடம்  கைத்துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தனது அறைக்குள் சென்று சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் காவல்துறை மட்டுமல்லாது, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் உடல் கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.


இதனிடையே கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துக் கொண்டதற்கு பணிச்சுமை காரணம் அல்ல என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். அதேசமயம் குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மன அழுத்ததால் கடந்த சில வாரங்களாகவே முறையாக தூங்கவில்லை என சக பணியாளர்களிடம் விஜயகுமார் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.


இதற்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்கொலை சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடக்க உள்ளது. 


முதலமைச்சர் இரங்கல்


இந்நிலையில் டிஐஜி விஜயகுமார் மரணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், 'கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் இ.கா.ப., இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.  விஜயகுமார் அவர்கள் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.


வைகோ இரங்கல்


”தமிழக காவல்துறையில், கோயம்புத்தூர் சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டு மாண்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது.


படித்துப் பட்டம் பெற்று, காவல்துறையில் உயர் பதவிக்கு வந்த விஜயகுமார் அவர்கள் எத்தகைய மன அழுத்தத்திற்கு ஆளானார் என்பதை யூகிக்க முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், காவல்துறையினருக்கும் என்னுடைய கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.