PONGAL GIFT: இன்றைக்கே இதை செஞ்சிடுங்க மக்களே...! நாளை பொங்கல் பரிசு விநியோகம் தொடக்கம்!

தமிழக அரசின் பொங்கல் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளது.

Continues below advertisement

பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ள நிலையில், கடந்த 4ம் தேதி முதல் அதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்களை, விநியோகிக்கும் பணியில் இன்றும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இன்றுடன் இந்த பணிகள் நிறைவடைய உள்ளதால், இதுவரை பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கனை பெறாதவர்கள், அந்தப்பகுதி ரேஷன் கடை ஊழியரை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.

Continues below advertisement

 

டோக்கன் பயன்பாடு என்ன?

ரேஷன் கடை ஊழியர்கள் பயனாளர்கள் மூலம் வழங்கும் டோக்கனில்,  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிட்டப்பட்டிருக்கும். நாள் ஒன்றுக்கு 200 பேருக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. பொதுமக்கள் பொங்கல் பரிசினை பெற ஒரே நேரத்தில் ரேஷன் கடைகளில் கூடுவதை தவிர்க்க, டோக்கன் முறை பயன்படுத்தப்படுகிறது. பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறைகள் இருந்தால்  புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் தொகுப்பு பெற்றவுடன் குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் தொடங்கி வைக்கும் திட்டம்:

டோக்கன் விநியோகம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார். அதைதொடர்ந்து, மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் பொங்கல் பரிசு விநியோகத்தை தொடங்கி வைக்கின்றனர்.

ஆலோசனையும் அறிவிப்பும்:

நடப்பாண்டு பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விதமாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். அதுமட்டும் இல்லாமல் ரொக்கப் பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை ஆகியவற்றை வழங்கிடவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் இந்த பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது .2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதன் மூலமாக தமிழக அரசுக்கு ரூ. 2,356.67 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டது.

கரும்பு:

இதனிடையே,  பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்காததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து கரும்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான கரும்புகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு 72 கோடியே 38 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது. அதன்படி ஒரு கரும்புக்கு போக்குவரத்து செலவு உட்பட 33 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே, கரும்பு கொள்முதல் செய்ய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது.

கரும்பு கொள்முதல்:

பன்னீர் கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். 6 அடிக்கு குறையாத கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். சராசரி தடிமனை விட கூடுதல் தடிமனாக கரும்பு இருக்க வேண்டும். நோய் தாக்கிய நிலையில் இருக்கும் பன்னீர் கரும்பினை கொள்முதல் செய்யக் கூடாது. விவசாயிகள் தரப்பில் இருந்து புகார்களுக்கு இடமளிக்காத வகையில் அந்த மாவட்டங்களில் விளையும் கரும்பை கொள்முதல் செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola