புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் உள்ள, புனித அடைக்கல மாதா அன்னை தேவாலயம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டது. தமிழக அரசும் இதற்கு ஒப்புதல் அளித்து, கடந்த 6ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம் என அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மாவட்ட நிர்வாகத்தால் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் முறையாக நிறைவடைந்த நிலையில், ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் இன்று தொடங்கியுள்ளது.
துரித கதியில் நடந்த பணிகள்:
இதற்காக, ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் இரட்டை பாரிக்கார்டுகள் அமைக்கும் பணி, மேடை சரி செய்யும் பணி, வாடிவாசலை ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களைக் கொண்டு சமப்படுத்தி மஞ்சு அமைத்தல் பணி ஆகியவை தீவிரமாக நடைபெற்றது. இந்தப் பணிகளில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கொரோனா பரிசோதனை:
இதனிடையே, மாடுபிடி வீரர்களும், உரிமையாளர்களுடன் மாடுகளும் அங்கு குவிய தச்சங்குறிச்சி கிராமமே களைக்கட்டியுள்ளது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவ குழுவினர் தச்சங்குறிச்சி பகுதிக்கு வந்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க முன்பதிவு செய்து இருந்த மாடுபிடி வீரர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதேபோல் காளைகளை அழைத்து வரக்கூடிய உரிமையாளர்கள் தரப்பில் 2 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தயார் நிலையில் வாடிவாசல்:
தேவாலயத்தின் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் காளைகள் வரிசையாக அனுமதிக்கப்படும் இடத்தில் காளைகள் மீது வெயில் படாமல் இருப்பதற்காக திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்கள் காயமடைவதை தவிர்க்க, ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் கூடுதலாக தேங்காய் நார்கள் கொட்டப்பட்டன.
சீறிப்பாய்ந்த காளைகள்:
பாரம்பரிய முறைப்படி முதலில் வாடி வாசல் வழியாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு முதல் மரியாதை செய்யப்பட்டது. பின்பு வீரர்கள் அனைவரும் ஜல்லிகட்டு விதிமுறைகளை பின்பற்றுவதாக உறுதிமொழி ஏற்றனர். அதைதொடர்ந்து, அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து, நடப்பாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர். இதையடுத்து, வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் வீரத்துடன் மடக்கி பிடித்து திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் உடனடியாக பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மேற்பார்வையில், ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 400-க்கும் அதிகமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். கால்நடை மருத்துவ குழுவினர், முதல் உதவி மருத்துவ சிகிச்சை குழுவினர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் தயார்நிலையில் உள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 800 காளைகளும், 300 காளையர்களும் பங்கேற்க உள்ளதாக ஜல்லிக்கட்டு விழா குழுவினர் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை காண உள்ளூர் மட்டுமின்றி, பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தந்துள்ளனர்.