தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பனிமூட்டம் அதிகாலையில் அதிகளவில் காணப்படுகிறது. அதிலும், குறிப்பாக சென்னையில் திடீரென இரவில் மழையும், அதிகாலையில் பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்து வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை:
08.01.2023: தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
09.01.2023 முதல் 11.01.2023 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
நாலுமுக்கு (திருநெல்வேலி) 2, ஊத்து (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
08.01.2023: மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு / கிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.