Kasampatti Biodiversity Heritage Sites: தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக, மதுரை அரிட்டாப்பட்டி கடந்த 2022ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லின் புதிய பெருமை:
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காசம்பட்டி (வீர கோவில்) கோயில் காடுகளை தமிழ்நாட்டின் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்க ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, திண்டுக்கல் வனப்பகுதியில் அழகர்மலை காப்புக்காடுக்கு அருகில் அமைந்துள்ள காசம்பட்டியை உயிரிய பன்முகச் சட்டம் 2002ன் கீழ் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்து, அரசிதழில் இதற்கான அறிவிப்பை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வெளியிட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி 2022ஆம் ஆண்டில் முதல் பல்லூயில் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மாநிலத்தின் இரண்டாவது பல்லுயிர் பாரம்பரிய தலமாகும் காசம்ப்பட்டி கோயில் காடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
காசம்பட்டி கோயில் காடுகளுக்கான அங்கீகாரம்:
நத்தம் தாலுகா, ரெட்டியபட்டி பஞ்சாயத்து, காசம்பட்டி கிராமத்தின் மையப்பகுதியில் அமைத்துள்ள வீர கோவில் ஒரு கோயில் காடுகள் ஆகும். 4.97 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த கோவில் காடுகளைச் சுற்றிலும் பசுமையான மாந்தோப்புகள் அமைந்துள்ளன. வன விலங்குகளை பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை எய்த உதவும் வகையில் ஒரு பாலமாக இது விளங்குகிறது. வீர கோவில், கோயில் காடுகளில் உள்ளூர் தெய்வமான "வீரணன்" குடிகொண்டுள்ளதால் உள்ளூர் மக்களால் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.
காசம்பட்டி கோயில் முக்கியத்துவம்:
காசம்பட்டி கோயில் காடுகள் பல்லுயிர் பன்முகத் தன்மையின் முக்கிய இடமாகும். இக்காடுககள் 48 தாவர இனங்கள், 22 புதர்கள், 21 கொடிகள் மற்றும் 29 மூலிகைகள் உட்பட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் குறிப்பிடத்தக்க பல்லுயிர்களின் தாயகமாக உள்ளது. இது காடுகளின் பாரம்பரிய செழுமைக்கு பங்களிக்கிறது. இப்பகுதியில் 12க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், பல்வேறு சிறிய பாலூட்டிகள், ஊர்வன மற்றும் எண்ணற்ற பூச்சிகள் போன்றவையும் பாதுகாக்கப்பட்ட சூழலில் செழித்து வளர்கின்றன. இது பாரம்பரிய பன்முகத் தன்மையின் கருவூலமாகவும் செயல்படுகிறது. சுற்றுச்சூழலின் மீள்தன்மை மற்றும் தழுவலுக்கு பங்களிக்கும் பல்வேறு வகையான தாவர இனங்கள் உள்ளன. இந்த மரபணு வளம் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்தல் மற்றும் மண் வளத்தை அதிகரிப்பதன் மூலம், மாந்தோப்புகள் உட்பட சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் உள்ளது.
இந்நிலையில் வெளியாகியுள்ள அறிவிப்பு உள்ளூர் சமூகத்தின் பங்கேற்புடன் பல்லுயிர்ப் பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்தும். இந்த அறிவிக்கை, இப்பகுதியின் வளமான உயிரியல் மற்றும் வரலாற்றுக் களஞ்சியத்தைப் பாதுகாக்கவும் இது உதவும்
பல்லுயிர் பாரம்பரிய தலம் என்றால் என்ன?
பல்லுயிர் பாரம்பரிய தளம் (Biodiversity Heritage Site) என்பது, சூழலியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த, அரிய மற்றும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள உயிரினங்கள், தனித்துவமான தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் வாழ்விடங்கள் கொண்ட பகுதியாகும். அங்குள்ள உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் பல்லுயிர் பாரம்பரிய தலங்களாக அங்கீகரிக்கப்பட்டு, இயற்கையை பாதிக்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மதுரை அரிட்டாப்பட்டியை தொடர்ந்து காசம்பட்டி கோயில் காடுகளும் அந்த பட்டியலில் இணைந்துள்ளன.
புதிய பல்லுயிர் பாரம்பரிய தலங்கள்?
இதுபோக, செந்திரக்கிளை புனித தோப்பு (கடலூர்), இடையப்பட்டி (மதுரை) மற்றும் குரியனப்பள்ளி வனத் தொகுதி (கிருஷ்ணகிரி) ஆகியவற்றை பல்லுயிர் பாரம்பரிய தளங்களாக அறிவிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 25 பல்லுயிர் பாரம்பரிய தல முன்மொழிவுகளை, தமிழ்நாடு பல்லுயிர் பாரம்பரிய தல வாரியம் ஆராய்ந்து வருகிறது. அரசாங்கத்தின் ஒப்புதலுக்காகவும், அதன் தொடர்ச்சிக்கான பணிகளையும் வாரியம் முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலம்:
தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலம் பற்றிய அறிவிப்பை, தமிழ்நாடு அரசு கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி அறிவித்தது. அதன்படி, மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்துக்கு உள்பட்ட அரிட்டாபட்டி மற்றும் மதுரை கிழக்கு வட்டத்துக்கு உள்பட்ட மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதி, தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அழகர் மலைக்கும், பெருமாள் மலைக்கும் இடையே உள்ள அரிட்டாப்பட்டி-மீனாட்சிபுரம் பல்லுயிர் சூழலியல் மண்டலத்தில் மலைப்பகுதிகளில் 250 பறவையினங்கள் உள்ளன. மேலும், பல்வேறு சமண சிற்பங்கள், சமண படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், 2200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோயில்கள் உள்ளன. இந்த பகுதியில்ல் 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்று குளங்கள், மூன்று தடுப்பணைகள் உள்ளன. இங்குள்ள ஆனைகொண்டான் ஏரி, 16ம் நுாற்றாண்டில் பாண்டியர்கள் ஆட்சியில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.