ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதி 4 மாதங்களுக்கு மட்டுமே என்றும் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவும் அரசே அதனை ஏற்று நடத்தவும் வலியுறுத்தினர்.
எக்காரணம் கொண்டும் தாமிர உற்பத்தி உள்ளிட்ட வேறு எந்த உற்பத்திக்கும் அனுமதி இல்லை, ஆலை இயங்குவதை கண்காணிக்க தூத்துக்குடி பொதுமக்கள், ஆட்சியர், மாவட்டம் காவல் எஸ்.பி, பொறியாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெறுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்த கருத்துகளை பார்ப்போம்.
கனிமொழி - ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் தயாரிப்புக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும், வேறு எந்த தயாரிப்புக்கோ, அங்கு உள்ளே இருக்கும் வேறு எதையுமோ பயன்படுத்த அனுமதி தரக்கூடாது, ஆக்சிஜன் தயாரிக்க தேவைப்படும் மின்சாரத்தையும் அரசே வழங்க வேண்டும், அங்கு மின்சாரத்தை துண்டித்த அரசே மின்சாரத்தையும் வழங்கவேண்டும். மேலும் இது தற்காலிகமாகவே இருக்க வேண்டும்.
வைகோ: அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தியை அனுமதிக்கலாம். எந்தக் காரணம் கொண்டும் ஆலையை இயக்க ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு அனுமதி கொடுக்கக்கூடாது.
சீமான்: கொரோனா இரண்டாம் அலை ஏற்படுத்தி இருக்கும் பேரிடர் காலச்சூழலை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைப் போக்குவதாகக் கூறி நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும், சட்டம் ஒழுங்கு சிக்க ஏற்படும்.
திருமாவளவன்: மண்டல வாரியாக தளம் அமைத்து ஓரிரு நாட்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும். ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதில் நோக்கம் உள்ளது.
முத்தரசன்: கொரோனா இரண்டாம் அலையால் லட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், உயிர்ப்பலியும் ஏற்படுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை பயன்படுத்தி வேதாந்தா நிறுவனம் உள்நோக்கோடு செயல்படுகிறது. தமிழக அரசு ஆலையை திறக்க சம்மதிக்கவில்லை என்றாலும் மத்திய அரசு திறக்கலாம் என்கிறது. மனிதாபிமான அடிப்படையில் தூத்துக்குடி ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம். ஆக்சிஜனை தமிழக தேவைக்கு பயன்படுத்த வேண்டும்.
டிடிவி தினகரன்: ஆக்சிஜன் பற்றாக்குறையைப் பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவதற்கான வேலைகளை தந்திரமாக அதன் உரிமையாளர்கள் செய்துவிடுவார்களோ என்ற பயம் தூத்துக்குடி மக்களிடம் இருக்கிறது. அவர்களின் இந்த உணர்வினைப் புரிந்துகொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆக்சிஜன் உற்பத்தி மட்டும் அடுத்த நான்கு மாதங்களுக்கு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதனை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு மட்டுமின்றி சென்னை உயர் நீதிமன்றமும் கண்காணித்திடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
பாலகிருஷ்ணன்: ஆக்சிஜன் தேவை இருக்கிறது. ஆலையை மொத்தமாக அரசு கைப்பற்ற வேண்டும். மக்கள் உயிர் காப்பாற்ற தமிழக அரசின் கண்காணிப்பு குழு கண்காணிக்க முடியும் என சொல்லி இருக்கின்றனர்.ஆக்சிஜன் தமிழகத்துக்கு தான் முன்னுரிமையாக இருக்க வேண்டும். ஆலையில் வேறு எந்த உற்பத்தியும் இருக்க கூடாது.
தங்கபாலு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்க நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை, கொரோனாவால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் தற்காலிக அனுமதி கோரப்பட்டுள்ளது. கண்காணிப்பு குழு அமைத்து ஆக்ஸிஜன் மட்டுமே தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஆக்ஸிஜனை தேவைக்கு பயன்படுத்தியது போக, மீதத்தை மற்ற மாநிலங்களுக்கு தர வேண்டும். இக்கட்டான காலம் என்பதால் அரசின் முயற்சிக்கு துணை நிற்போம்.