தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே கடந்த நவம்பர் 18 ஆம் தேதி லேசான காய்ச்சல், சளி மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்த் சென்னை போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டதட்ட 23 நாட்கள் சிகிச்சைக்குப் பின் அவர் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவர் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் அவருக்கு நுரையீரல் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இன்று காலை தேமுதிக தரப்பில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. காலை 9 மணி அளவில் மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் விஜயகாந்திற்கு நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் மருத்துவர்களின் தொடர் முயற்சி இருந்த போதிலும் இன்று காலை சிகிச்சை பல்னின்றி உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு தமிழ்நாடு ஆளுநர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் பக்க பதிவில், “ சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புள்ள தலைவருமான, சிறந்த மனிதநேயவாதியான விஜயகாந்த் அவர்களின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். எனது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினருடனும் எண்ணற்ற ஆதரவாளர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி!” என குறிப்பிட்டுள்ளார்.