தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்றும் வந்தார். இதனிடையே கடந்த நவம்பர் 18 ஆம் தேதி சளி மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்த் சென்னை போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டதட்ட 23 நாட்கள் சிகிச்சைக்குப் பின் அவர் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


இதற்கு இடைப்பட்ட காலத்தில் விஜயகாந்த் உடல்நிலைப் பற்றி பல்வேறு விதமான வதந்திகள் பரவ தொடங்கியது.  தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் அச்சத்தைப் போக மியாட் மருத்துவமனை, தேமுதிக தலைமைக்கழகம் ஆகியவை விஜயகாந்த் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிட்டு வந்தனர்.தொடர்ந்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.


இதனையடுத்து டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெற்ற தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு விஜயகாந்த் அழைத்து வரப்பட்டார். அவரின் நிலை கண்டு தொண்டர்களும், பொதுமக்களும் நிலைகுலைந்து போயினர். விஜயகாந்த் மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என கண் கலங்கியபடி தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உடல்நலக்குறைவால் மீண்டும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக இன்று அதிகாலை தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. 


இந்நிலையில் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் குவிந்துள்ளனர். இதனையடுத்து தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. பலரின் கண்ணீர் துடைத்த கேப்டன் விஜயகாந்த் இன்று கண்ணீர் மல்க நம் அனைவரிடம் இருந்து விடை பெற்றுள்ளார்.