தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் அதே கட்டுப்பாடுகள் நீடிக்கிறது. இரண்டாவது வகையில் மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டை உள்பட 23 மாவட்டங்களும், மூன்றாவது வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
இரண்டாவது மற்றும் மூன்றாவது வகை மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,இந்த 27 மாவட்டங்களுக்கு மட்டும் இ-பதிவு பெற்று திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இ-பதிவு முறையை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசு இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், திருமண நிகழ்வுக்கான இ-பதிவில் தவறு செய்தால் சிவில் அல்லது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
27 மாவட்டங்களில் திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும் என்றும், தவறான தகவல் வந்தாலே அல்லது அதிகம் பேர் இ-பதிவு செய்திருந்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுக்கான இ-பதிவை பலரும் தவறாக பயன்படுத்துவதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழக அரசு நேற்று பிறப்பித்த உத்தரவில், திருமண நிகழ்வுகளுக்காக 2வது வகை மற்றும் 3வது வகையில் இடம்பெற்றுள்ள மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும், இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணைய வழியாக http://eregister.tnega.org என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் ஆகிய சுற்றுலா தளங்களில் அவசர காரணங்களுக்காக மட்டுமே பயணிக்க மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து இ- பாஸ் பெற்று அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது வகையில் அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : E Registration | எந்தெந்த மாவட்டத்தினர் திருமணத்திற்கு இ-பாஸ் பெறலாம்? எப்படி பெறலாம்?