தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவல் காரணமாக கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களை தவிர பிற இடங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 21-ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கை அமல்படுத்தி தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஊரடங்கை வரும் 28-அ தேதி வரை நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.
தமிழக அரசின் இந்த புதிய உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களும் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் வகையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் முன்பிருந்த அதே கட்டுப்பாடுகள் வரும் 28-ஆம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் ஓரளவு குறைந்துள்ள மதுரை, விருதுகர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட 23 மாவட்டங்கள் இரண்டாவது வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கடைகள் திறப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சில கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மூன்றாவது வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைவாக காணப்படுகிறது. இந்த மாவட்டங்களில் இரண்டாவது வகை மாவட்டங்களில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தளர்வுகளின் ஒரு அங்கமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 100 பேருடன் படப்பிடிப்பு பணிகள் தொடங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணிதல் மற்றும் முறையாக சமூக இடைவெளி கடைபிடித்தால் உள்ளிட்ட கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பில் கலந்துகொள்வோர் அனைவரும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.