Pongal Parisu Thoguppu 2025: தமிழ்நாட்டின் அடையாளமாக திகழ்வது பொங்கல் பண்டிகை ஆகும். ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் வரும் இந்த பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.
நாளை மறுநாள் டோக்கன்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் தமிழக மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். நடப்பாண்டும் பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறும் மக்களுக்கான டோக்கன் நாளை மறுநாள் ( ஜனவரி 3ம் தேதி) முதல் விநியோகிக்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு:
இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் டோக்கன் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த டோக்கன்களை நியாய விலைக் கடை ஊழியர்களே வீடுதோறும் சென்று வழங்குவார்கள். அந்த டோக்கனில் பொங்கல் பரிசுத் தொகுப்பு எந்த தேதியில், என்ன நேரத்தில் வழங்கப்படும்? என்ற விவரம் இடம்பெற்றிருக்கும். பொங்கல் பரிசுத்தொகுப்பு காலையில் 100 பேருக்கும், மதியம் 100 பேருக்கும் வழங்க திட்டமிடப்பட்டு்ளது.
அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. தமி்ழ்நாடு முழுவதும் உள்ள 2.20 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
கரும்பு கொள்முதல் தீவிரம்:
தமிழ்நாடு அரசு குடும்ப அட்டை வைத்துள்ள மக்கள் மட்டுமின்றி இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் தமிழர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக தமிழ்நாடு அரசு ரூபாய் 249.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்கப்பட உள்ள கரும்பை அந்தந்த மாவட்ட விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்ய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நாளில் உரிய காவல்துறை பாதுகாப்பும் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரு வாரமே இருப்பதால் பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்காக கரும்புகள் கொள்முதலிலும் அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மேலும் கரும்பு விவசாயிகளும் தங்கள் கரும்புகளை தீவிரமாக விற்பனை செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
கரும்பு மட்டுமின்றி மஞ்சள் உள்ளிட்ட பிற பயிர்கள் விவசாயிகளும் பொங்கல் விற்பனைக்குத் தயாராகி வருகின்றனர். பொங்கல் பரிசுத் தொகுப்பு எந்த புகாருக்கும், விமர்சனத்திற்கும் ஆளாகாத வகையில் மக்களுக்குச் சென்று செல்லும் வகையில் அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.