பொங்கல் பரிசு வழங்குவது அரசின் கொள்கை ரீதியான முடிவு, வழக்கு சம்பந்தமாக முன்கூட்டியே பதிலளிக்க இயலாது என தமிழ்நாடு அரசு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.
வழக்கு:
தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில் “தமிழ்நாட்டில் 2017ஆம் ஆண்டு முதல் பொங்கலை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இதற்கான வேஷ்டி, சேலைகளை தமிழ்நாடு நெசவாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பாராட்டத் தகுந்த முடிவை எடுத்துள்ளது. இதுவரை அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான விவசாயப் பொருள்கள் அருகாமை மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்பட்டுள்ளன.
சில சமயங்களில், அந்தக் கடைகள் தரமான பொருள்களை வழங்குவது கிடையாது. இதற்கு மாற்றாக அவற்றை தமிழ்நாடு விவசாயிகளிடமிருந்தே வாங்கினால் விவசாயிகளும் பலனடைவர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படக் கூடிய பொருள்களை தமிழ்நாடு விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
விசாரணை:
இது தொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொங்கல் பரிசு வழங்குவது அரசின் கொள்கை ரீதியான முடிவு, வழக்கு சம்பந்தமாக முன்கூட்டியே பதிலளிக்க இயலாது என தமிழ்நாடு அரசு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்தது.
மேலும் மனு தொடர்பாக, கூட்டுறவுத்துறை செயலாளர், வேளாண்துறை முதன்மைச் செயலாளர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளிலே மிகவும் முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகை. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியூரில் வசிப்பவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி குடும்பத்தினருடன் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில், பொங்கல் தொகுப்பை வழங்குவதற்கு, விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.