தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளிலே மிகவும் முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகை. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியூரில் வசிப்பவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி குடும்பத்தினருடன் கொண்டாடுவது வழக்கம்.
இதனால், பொங்கல் பண்டிகையின் போது சென்னை, திருப்பூர், கோவை ஆகிய நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால், அந்த சமயங்களில் ரயில் மற்றும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும்.
பொங்கல் பண்டிகைக்கு 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் நடைமுறை கடந்த சில ஆண்டுகளாகவே வழக்கமாக உள்ளது. அடுத்தாண்டு கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. அதாவது, ஜனவரி 12-ந் தேதி பயணிக்க செப்டம்பர் 14-ந் தேதியான நேற்று ரயில் முன்பதிவு தொடங்கியது. இதையடுத்து, ஜனவரி 13-ந் தேதி பயணிக்க இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. பொங்கலுக்கு முந்தைய நாளான ஜனவரி 14-ந் தேதி பயணிக்க நாளை முன்பதிவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஜனவரி 13-ந் தேதி பயணிப்பதற்கான முன்பதிவுக்கான டிக்கெட் இன்று காலை தொடங்கியது, இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய சில நிமிடங்களிலே டிக்கெட் பதிவு முடிந்தது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் செல்லும் ரயில்களுக்கான டிக்கெட் மின்னல்வேகத்தில் முன்பதிவாகியது.
சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை அதிவிரைவு ரயிலுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலே விற்றுத்தீர்ந்தது. அதேபோல, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் முன்பதிவு நிறைவு பெற்றது. இந்த ரயில்களில் காத்திருப்பு பட்டியலில் கூட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
காலை 8 மணிக்கே தொடங்கிய சில நிமிடங்களிலே முன்பதிவு டிக்கெட்டுகள் முடிந்ததால், டிக்கெட்டுகள் கிடைக்காமல் பயணிகள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். பொங்கல் பண்டிகைக்கு செல்லும் போது மட்டுமின்றி, சொந்த ஊர்களில் இருந்து சென்னை, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு திரும்பும்போதும் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
ரயில்களில் பொங்கல் பண்டிகையான ஜனவரி 15-ந் தேதி பயணிக்க நாளை மறுநாள் (17-ந் தேதி), ஜனவரி 16-ந் தேதி( மாட்டுப் பொங்கல்) அன்று பயணிக்க வரும் செப்டம்பர் 18-ந் தேதியும், ஜனவரி 17-ந் தேதி பயணிக்க வரும் 19-ந் தேதியும், ஜனவரி 18-ந் தேதி பயணிக்க வரும் 20-ந் தேதியும் முன்பதிவு செய்யலாம்.
மேலும் படிக்க : காலை உணவுத் திட்டம் அரசின் செலவோ, சலுகையோ, இலவசமோ அல்ல, இது அரசின் கடமை - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
மேலும் படிக்க : Free Breakfast Scheme: பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் இலவசக் காலை சிற்றுண்டி; ஏன் அவசியம்?