நாடு முழுவதம் கொரோனா இரண்டாவது அலை மிக பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ள சூழலில், இந்தியாவே ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சி விட திணறி கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல நட்சத்திரங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் தங்களால் ஆன உதவிகளை அரசுக்கும், மக்களுக்கும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் தனது உதவி கரத்தை தமிழக மக்களுக்காக நீட்டியுள்ளது. சிஎஸ்கே சார்பில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் விதமாக 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தமிழக அரசிற்கு வழங்கப்படவுள்ளது.
சிஎஸ்கே நிர்வாகத்தின் இயக்குநர் R.சீனிவாசன் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத் ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இல்லத்தில், அவரை நேரில் சந்தித்து இதனை வழங்கினர். சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் வழங்கியுள்ள ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும் என சிஎஸ்கே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் "மாஸ்க் போடு" என்னும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை சி.எஸ்.கே மேற்கொண்டு வருகிறது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பலர் கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்வது, தடுப்பூசி செலுத்தி கொள்வது உள்ளிட்ட விஷயங்களை காணொளி மூலம் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆக்ஸிஜன் செறிவூட்டி வழங்கும் இயந்திரத்தை சி.எஸ்.கே வழங்கியுள்ளது. இந்த இயந்திரம் காற்றிலிருந்து ஆக்ஸிஜனை பிரித்து ஒரு குழாய் மூலம் மூக்கு வழியாக உடலுக்குள் செலுத்தும். இதிலிருந்து வெளியாகும் ஆக்ஸிஜன் 90 முதல் 95 சதவிகிதம் வரை சுத்தமானது என்று தெரிவிக்கப்படுகிறது, ஒருவருக்கு ஆக்ஸிஜன் படுக்கை வசதி கொண்ட சிகிச்சை கிடைக்கும் வரை, அவரின் நுரையீரல் செயல்பாடுகளை குறைக்க இது உதவும். மேலும் ஆக்சிஜன் வசதி இல்லாத மருத்துவமனை அல்லது சிகிச்சை மையங்களில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் முக்கிய பங்கு வகிக்கும். தற்போது முதற்கட்டமாக குறிப்பிட்ட அளவிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளது, அடுத்த வாரத்திற்குள் முழுமையான அளவில் 450 ஆக்சிஜன் செறிவூட்டிகளும் வழங்கப்படும் என சி.எஸ்.கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. "சென்னை மக்களும் தமிழக மக்களும்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இதயம், இது போன்றதொரு கடினமான காலகட்டத்தில் கோவிட் எதிரான போரில் நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்" என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.