தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் திமுக வெற்றிபெற்று 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவரோடு 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். தமிழகத்தில் திமுக ஆட்சி தொடங்கியுள்ள நிலையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டுள்ளார்.




கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன், சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். முன்னதாக நேற்று மாலை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திந்திருந்த நிலையில் இன்று திமுகவில்  இணைந்துள்ளார் கீதா மணிவண்ணன்.


அதிமுக சார்பில் போட்டியிட்ட கீதா மணிவண்ணன் 2016-2021 தேர்தலில் கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு பின் கரூர் மாவட்ட அதிமுக கோஷ்டி பூசலால் கலகலத்தது. முன்னாள் அதிமுக அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும், எம்.எல்.ஏ.கீதா மணிவண்ணனுக்கும் கடுமையான பனிப்போர் நிலவியது. அவ்வப்போது அதிமுக தலைமை வரையிலும் பஞ்சாயத்து சென்றுவந்தது. இந்நிலையில்தான் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிட கீதா மணிவண்ணன் விருப்பமனு தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. 




அதிமுக சார்பில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு நெருக்கமாக கூறப்பட்ட முத்துக்குமாருக்கு சீட் கொடுக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் திமுக வேட்பாளா் சிவகாமசுந்தரி வெற்றி பெற்ரார். அவர் மொத்தமாக 96,540 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் முத்துக்குமார் 64,915 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றார். தொடர் உள்கட்சி பூசல், சீட் மறுக்கப்பட்டது, ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் தற்போது கீதா மணிவண்ணன் திமுகவில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. கீதா மணிவண்ணன், அதிமுகவில் இருந்து விலகியுள்ளது கரூர் மாவட்ட அதிமுகவை சற்று பலவீனமடைய வைத்துள்ளது.