தமிழக அரசு மக்களின் அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரிசி, மண்ணெண்ணெய், பருப்பு ஆகியவற்றை நியாய விலைக்கடை (ரேசன் கடை) மூலமாக விநியோகித்து வருகிறது. இந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் பல நியாய விலைக்கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் இன்னும் விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, நியாய விலைக்கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான பருப்பு மற்றும் பாமாயிலை வரும் செப்டம்பர் 5ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பருப்பு, பாமாயில்:
இதுதொடர்பாக, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 2024 ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டைப் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையினை கருத்தில் கொண்டு துவரம்பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டை வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் குடும்ப அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்கும் அரிசி, பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் மூலமாக லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.