தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு விளையாட்டுத் துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் இதுவரை பெரியளவு பிரபலம் இல்லாத ஃபார்முலா கார் பந்தய போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


தொடங்கியது ஃபார்முலா 4 கார் பந்தயம்:


இதையடுத்து, இந்த திட்டத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு சென்னையில் இன்று ஃபார்முலா 4 கார் பந்தயமானது தொடங்கியது. கார் பந்தயத்தை  விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 


இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் கார் பந்தயத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. 


இந்த கார் பந்தயம் சென்னையின் தீவுத்திடல், போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை வரை என மொத்தம் 3.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடத்தப்பட உள்ளது. இன்றும், நாளையும் என இரண்டு நாட்களாக இந்த பந்தயம் நடைபெற உள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:


கார் பந்தயத்தை முறையாக நடத்தும் விதமாக பந்தயம் நடைபெறும் வழித்தடங்களில் முழுவதும் சாலையின் இருபுறமும் தடுப்புக்கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. கார்கள் அதிவேகத்தில் சீறிப்பாயும் என்பதால் தடுப்புக் கம்பிகளுடன் கார்கள் மற்றும் வீரர்களின் பாதுகாப்பு கருதி ஏராளமான டயர்களும்  இருபுறமும் அடுக்கப்பட்டுள்ளது.


இந்த பந்தயத்தில் மொத்தம் 19 திருப்பங்கள், அதிவேக நேர் வழிகளுடன் கூடிய பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபார்முலா 4 கார் பந்தயத்தை 9 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்கலாம்.


எப்போது?


இன்று மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி சுற்றுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தாமதமானதால், 7 மணிக்கு பயிற்சி ஆட்டமானது தொடங்கியது. 


சென்னை தீவுத்திடலில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார், இரவு 7 மணிக்கு தொடங்கிய பயிற்சி போட்டிகள் இரவு 10.45 மணிக்கு நிறைவடைகிறது. 


போட்டியைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் வருவார்கள் என்பதால்  கலைவாணர் அரங்கம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், சென்னை மெரினா கடற்கரை, சென்னை பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் பார்க்கிங் வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் பந்தயம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மேலும், பேன்கோட் ஓடிடி தளத்திலும் காணலாம். கார் பந்தயத்தை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் பந்தயத்தில் பிரபல வீரர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.