மதுரையில் கல்லூரி ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியும் இன்று தொடங்கி வைத்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் “ மதுரை இன்று கொரோனா பாதிப்பினால் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. முதல் அலையை விட மிக அதிகமான தொற்று பாதிப்புகள் தற்போது மதுரையில் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த செய்த பணிகள் போதியளவில் இல்லை. தற்போது தேவையான வசதிகள் என்ன என்பதை ஆய்வு செய்து, அதை உடனடியாக நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம். அலோபதி மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன. மருத்துவர்கள், செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே படுக்கை வசதிகளை அதிகப்படுத்த முடியும். இறுதியாண்டு படிக்கும் மருத்துவ மாணவர்கள், வெளிநாட்டில் படித்துவிட்டு நமது நாட்டில் பணியாற்றுவதற்கான தேர்வு எழுதாமல் இருப்பவர்களுக்கு தற்காலிக விதி விலக்கு அளித்து பணியமர்த்த ஏற்பாடு செய்துள்ளோம்.
ஆக்சிஜன் வசதி, கொரோனா பரிசோதனை கருவிகள், வெண்டிலேட்டர், ஆண்டி வைரஸ் மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகமாக உள்ளது. இதை சமாளிக்க வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்ய முயற்சி செய்து வருகிறோம். இதுதவிர, சித்த மருத்துவம், மற்ற பாரம்பரிய மருத்துவ முறைகளையும் பயன்படுத்த உள்ளோம். இதற்கு மேலாக மக்கள் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். மக்கள் ஊரடங்கு விதிகளை மதித்து, மிகுந்த கவனத்துடன் பின்பற்ற வேண்டும்.
தற்போதுள்ள சூழலில் ஆக்சிஜன் வசதிகளை ஏற்படுத்த முடியவில்லை. ஆக்சிஜன் வசதிகளை ஏற்படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் தனி கண்காணிப்பு அதிகாரிகள் குழுவை அமைத்து துரிதமாக ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் வருவது தாமதமாகி கொண்டிருக்கிறது. இருப்பினும், அடுத்த 3 நாட்களில் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கி விடுவோம்” என்றார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் 297 நபர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.
சமீபகாலமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பவர்களில், பெரும்பாலோனார் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் வேலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுக்கு பின்னரும் சில இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்த சூழலில், நிதியமைச்சர் இன்று தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை மூன்று நாட்களில் சரி செய்யப்படும் என்று கூறியிருப்பது பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.