தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதை கட்டுப்படுத்த புதியதாக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதற்காக, மாநிலம் முழுவதும் வரும் 24-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், இன்று முதல் தேவையின்றி வெளியில் சுற்றும் வாகனங்கள் மற்றும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.


கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான மருத்துவ உபகரணங்களான ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கும், பிற பயன்பாடுகளுக்கும் புதியதாக பதவியேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் அதிபர்களும், முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதி உதவியை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.




அவரது வேண்டுகோளை ஏற்று பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதியை நன்கொடையாக அளித்து வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க. தலைமை கழகத்தின் சார்பில், அக்கட்சியின் தலைவரும். முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “கொரோனா இரண்டாவது அலையால், தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. சார்பில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் 124 தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பதவியேற்றுக் கொண்டனர். இதுதவிர, நாடாளுமன்றத்தின் மக்களவையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 39 பேரும், மாநிலங்களவையில் 7 எம்.பி.க்களும் உள்ளனர்.


ஏற்கனவே, முதல்வரின் கோரிக்கையை ஏற்று பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் மற்றும் 1 எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியம் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று நேற்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.


இன்று நடிகர் அஜீத் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 25 லட்சமும், நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் ரூபாய் 1 கோடியும் வழங்கியுள்ளனர். மேலும், பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதி உதவியை தொடர்ந்து அளித்து வருகின்றனர். கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் தமிழகத்தில் நேற்று மட்டும் 297 நபர்கள், கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 30 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு நேற்று மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.