கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல் ஆணையர் இணைய முகப்பில் ஆதியோகி சிலை வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்ததால், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் படம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.


கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல் ஆணையர் இணைய முகப்பில் சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி சிலை இடம் பெற்றிருந்தது. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பிக்கள் கவனத்திற்கு வந்தவுடன், கோவையின் அடையாளமா ஈஷா யோகா மையம் என்கிற கேள்வியை எழுப்பினர். இதுதொடர்பாக கோவை எம்.பி. தனது முகநூல் பக்கத்தில் கண்டன பதிவிட்டார்.



அதில், ‘கோவை மாவட்டத்திற்கு பல்வேறு சிறப்புகள்  உள்ளது. பஞ்சாலை மிகுந்த நகரம் என்பதால் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதுபோக தொழில்துறை, மருத்துவம், கல்வி என அனைத்திலும் தனிச்சிறப்போடு இம்மாவட்டம் திகழ்கிறது. இம்மாவட்டத்தின் அடையாளமாக வேளாண்கல்லூரி, பாரதியார் பல்கலை கழகம், அரசு மருத்துவமனை. பேருர் கோவில், கோனியம்மன் கோவில், மருதமலை கோவில், என பல பிரபலமான அடையாளங்களை கொண்டுள்ளது. ஆனால் சமீபத்தில் ஈஷாயோகா மையத்தின் ஜக்கி வாசுதேவ் ஆசிரமம் அமைத்து பிரபலமானார். மத்திய ஆட்சியாளர்களின் நெருக்கத்தை பயன்படுத்தி பழங்குடியின மக்களின் நிலம் அபகரிப்பு, அரசின் விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த ஈஷா மையத்தின் மீது உள்ளது. இந்நிலையில் இந்த மையத்தின் சிவராத்திரி விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து வந்து தனது செல்வாக்கை அதிகரிக்க செய்தார். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தின் இணையப்பக்கத்தில் ஈசாவின் ஆதியோகி சிலையை இடம்பெறச்செய்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியதற்கு பிறகு அது அகற்றப்பட்டு, மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் தெற்கு கோபுரம் வைக்கப்பட்டது. இந்நிலையில் கோவை மாவட்ட நிர்வாகத்தின் இணையப் பக்கத்தின் முகப்பிலும் இத்தகைய சிலை இடம்பெற்றிருப்பது தெரியவந்தது’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.



இதனையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின்  கோவை நாடாளுமன்ற உறுபபினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் எதிர்ப்பு செய்தனர். மேலும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். இதேபோல சமூக நீதிக்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து உடனடியாக கோவை மாவட்ட நிர்வாகத்தின் இணைய முகப்பு பக்கத்தில் இருந்த ஈசாவின் அடையாளங்கள் அகற்றப்பட்டது. அந்த இடத்தில் கோவை வேளாண் கல்லூரியின் படம் இடம் பெறச் செய்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த கோவை மாவட்ட ஆட்சியருக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.



எதிர்ப்புகள் எழுந்ததால் மதுரை விமான நிலையத்தின் இணையப்பக்கத்தை தொடர்ந்து கோவை மாவட்ட நிர்வாகத்தின் இணைய முகப்பில் இருந்தும் ஈசாவின் ஆதியோகி சிலை படம் அகற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.