தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
“ இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்களுடைய 2 விசைப்படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்தபோதிலும், பாக்ஜல சந்திப்பில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தடையின்றி தொடர்வதாகவும், இது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியை நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்ய தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள 100 மீன்பிடிப் படகுகளை விடுவிக்கவும் வெளியுறவுத்துறை அமைச்சர் உதவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களை தாக்குவதும், தமிழக மீனவர்களை கைது செய்வதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதனால், இந்திய இலங்கை கடற்படையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் பல ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த இன்னல்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மீனவர்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் எந்தவித தீர்வும் இதுவரை கிடைக்காததால் மீனவர்கள் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் படிக்க : IIT Madras: பொருளாதார ரீதியாக பின்தங்கிய 10 ஆயிரம் மாணவர்களின் கற்றலுக்கு உதவும் ஐஐடி சென்னை..
மேலும் படிக்க : Vande Bharat Trail Run: சென்னை - மைசூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி..! மகிழ்ந்த மக்கள்..