சென்னை ஐஐடியும், சதர்லாண்ட் நிறுவனமும் விரிவான தொழில்நுட்பக் கற்றல் குறித்த தேசிய திட்டத்தின் (என்பிடிஇஎல்) கீழ் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள 10,000 மாணவர்களின் கல்விக்கு உதவ உள்ளன. 


இந்த திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த 10 ஆயிரம் மாணவர்கள் 50 % உதவித்தொகையைப் பெறுகின்றனர். நாடு முழுவதும் உள்ள 18 மாநிலங்களின் 160 கல்லூரிகளைச் சேர்ந்த 10,000 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. என்பிடிஇஎல் ஆன்லைன் படிப்புகளின் 2022 ஜனவரி மாத  செமஸ்டர் தேர்வுக்கான சான்றிதழைப் பெற இந்த உதவித்தொகை பயன்படும். 


சென்னை ஐஐடியும், சதர்லாண்ட் திட்டம் பற்றி என்பிடிஇஎல் ஒருங்கிணைப்பாளரும், சென்னை ஐஐடி பேராசிரியருமான ஆண்ட்ரூ தங்கராஜ் கூறுகையில், “சதர்லாண்டின் உதவியால் குடும்பத்தின் முதல் தலைமுறை மாணவர்கள், என்பிடிஇஎல் சான்றிதழை பெறும் வாய்ப்பை பெறுகிறார்கள்” என்று தெரிவித்தார்.


என்பிடிஇஎல் பொறியியல், கலை, வணிகவியல், அறிவியல், நிர்வாகவியல் உட்பட நாடு முழுவதும் உள்ள 5,000 கல்லூரிகளுடன் பணியாற்றி வருகிறது. ஏராளமான மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களின் துறைகளில் நவீனத் திறன்களுடன் தங்களை மேம்படுத்திக்கொள்ளவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், இந்த சான்றிதழ் தேர்வுகள் உதவுகின்றன. ஏராளமான மாணவர்களையும் இந்த திட்டம்  தயார்படுத்துகிறது.


இந்தத் திட்டம் குறித்து சதர்லாண்ட் நிறுவனத்தின் உலகளாவிய மக்கள் செயல்பாட்டு பணியின் மூத்த துணைத் தலைவர் அனில் ஜோசப் கூறும்போது, “எதிர்காலத் தலைவர்களின் கல்விக்கான எங்கள் முதலீடு டிஜிட்டல் பரிவர்த்தனையில் திறனை வளர்ப்பதற்கான எங்களின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்தார்.




என்பிடிஇஎல் பின்னணி


மத்திய கல்வித்துறையின் கீழ், சென்னை ஐஐடி, இந்திய அறிவியல் கல்விக்கழகம் (ஐஐஎஸ்சி) உள்ளிட்ட ஐஐடிகளின் கூட்டு முன்முயற்சியாக  என்பிடிஇஎல் உள்ளது.  அறிவியல், சமூகவியல், நிர்வாகவியல் போன்ற துறைகளில் தேசிய பெருந்திரள் திறந்தநிலை இணைய (MOOCs) வகுப்புகளுக்கான https://swayam.gov.in/ என்ற இணைய பக்கத்தில்  ஒவ்வொரு செமஸ்டரின் போதும், 600-க்கும் அதிகமான சான்றிதழ் படிப்புகளை  என்பிடிஇஎல் வழங்குகிறது. 


என்பிடிஇஎல் பாட வகுப்புகளில் இதுவரை 1.9 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் இணைந்துள்ளனர். 140 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் என்பிடிஇஎல் வீடியோக்களைப் பார்த்துள்ளனர். 1.4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள், என்பிடிஇஎல் தேர்வு உதவித்தொகை மூலம் பயனடைந்துள்ளனர்.


என்பிடிஇஎல் வகுப்புகள் 4, 8 மற்றும் 12 வாரங்களில் வழங்கப்படுகின்றன. இந்த வகுப்புகளில் சேரவும் கற்கவும் எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதையும் வாசிக்கலாம்: 10th 11th 12th Exam Time Table: வெளியான தேதிகள்; 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்போது?- முழு அட்டவணை இதோ!