நாட்டின் ரயில்வே துறையில் புதிய சகாப்தமாக கருதப்படுவது வந்தே பாரத் ரயில். இந்திய ரயில் சேவையிலே அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாட்டில் 75 வந்தே பாரத் ரயிலை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


தென்னிந்தியாவிலே முதன்முறையாக சென்னை முதல் மைசூர் வரை வந்தே பாரத் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வந்தே பாரத் ரயிலுக்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. சென்னையில் இருந்து காட்பாடி வழியாக மைசூர் சென்றடைந்தது. இன்று காலை தொடங்கிய இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக மைசூரை சென்றடைந்து வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 






முன்னதாக, சோதனை ஓட்டத்திற்காக இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5-வது வந்தே பாரத் ரயில் சென்னை- பெங்களூரு- மைசூர் இடையான சோதனை ஓட்டத்தை, தென்மண்டல ரயில்வே மேலாளர் மல்லையா இந்த சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார். சரியாக காலை 5.50 மணி அளவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையில் இருந்து மைசூருக்கு இயக்கப்பட்டது. இந்த ரயிலானது வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக பெங்களூர் சென்று அங்கிருந்து மைசூர் சென்றடைந்தது.


சென்னை முதல் மைசூர் வரையிலான 483 கிலோ மீட்டர் தொலைதூரத்தை எந்தவித சிரமுமின்றி வந்தே பாரத் கடந்தது. நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயிலான சென்னை – மைசூர்  வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.




நாட்டில் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில், அடுத்தடுத்து டெல்லி – அமிர்தசரஸ், டெல்லி – லக்னோ, கவுரா – ராஞ்சி, மும்பை – புனே, டெல்லி – போபால், பெங்களூர்  முதல் கன்னியாகுமரி, கவுரா – பூரி, எர்ணாகுளம் – பெங்களூர், புனே – பெங்களூர், செகந்திராபாத் – திருப்பதி – பெங்களூர், சென்னை – கன்னியாகுமரி ஆகிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வந்தே பாரத் ரயில்களுக்கான வழித்தடத்தில் சில ரயில்கள் சதாப்தி ரயில்களுக்கு பதிலாக இயக்கப்பட உள்ளது.


மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய திறன் கொண்ட இந்த வந்தே பாரத் ரயில் தற்போது வரை அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதத்தில் வந்தே பாரத் ரயில் தண்டவாளத்தை கடந்த மாடுகள் மீது மோதியதில் வந்தே பாரத்தின் முன்பக்கம் மிக கடுமையாக சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்க்கது.