தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை நாம் அனைவரும் அறிந்து கொள்வதற்கான தொன்மையான இடங்களில் குறிப்பிடத்தக்கது கங்கைகொண்ட சோழபுரம். அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள ஆலயம் தமிழர்களின் வரலாற்றை உலகெங்கும் எடுத்துக்காட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


இந்த நிலையில், கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். ஜெயங்கொண்டம் அருகே அமைந்துள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் அகழாய்வுத் துறையின் சார்பில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.




மாளிகைமேடு பகுதியில் நடைபெற்று வரும் இந்த அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். இங்கு இதுவரை இரண்டு கட்டங்களாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளில் கிடைத்த 25 செ.மீ. உயரமுள்ள மண்பானை, உடைந்த தங்கக்காப்புகள்,  யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள், கண்ணாடித் துண்டுகள் உள்ளிட்ட பல பொருட்களையும் நேரில் கண்டறிந்தார்.


மேலும், இந்த அகழ்வாராய்ச்சி தொடர்பாக தொல்லியல்துறை அறிஞர்களிடமும் கேட்டறிந்தார். முதலமைச்சர் மேற்கொண்ட இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, அன்பில்மகேஷ், சிவசங்கர், தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, வி.சி.க. தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.






முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் பயணமாக பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் பெரம்பலூர் சென்ற அவர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தமிழ்நாட்டில் கீழடி, சிவகளை உள்ளிட்ட பல பகுதிகளிலும் தொல்பொருள் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட பகுதிகளில் இருந்து பல்வேறு அரிய வகை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மேலும், பெரம்பலூரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சிப்காட்டை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த சிப்காட் பூங்கா மூலமாக 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதியதாக கட்டப்பட உள்ள காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.


மேலும் படிக்க:உங்கள் மகனை இப்படி நடத்துவீர்களா? பயங்கரவாதி என அழைத்த பேராசிரியருக்கு இஸ்லாமிய மாணவன் சரமாரி கேள்வி..!


மேலும் படிக்க: Delhi murder case: டெல்லி கொலை வழக்கு: ஷ்ரத்தாவின் மோதிரத்தை புதிய காதலிக்கு பரிசாக அளித்த ஆப்தாப்: வெளியான திடுக் தகவல்