எந்த விதத்திலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு கூடாது என்பது தான் அனைவரது நிலைப்பாடும் என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார்.


கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது, ”நாடு வேகமாக வளர்ந்து வருகிறது. ஜி-20க்கு தலைமை தாங்க போகிறோம். விவேகானந்தர் உலகத்தின் குருவாக பாரதம் இருக்க வேண்டுமென நினைத்த கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது. இதனால் நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார். 


தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி கொடுக்காதற்கு அரசியல் காரணமா என்ற கேள்விக்கு, “நான் கருத்து சொல்ல முடியாது. அச்சட்டம் குறித்து ஆளுநர் சில விபரங்களை கேட்டுள்ளார். அமைச்சர் சில விவரங்களை கூறியுள்ளார். இது குறித்து தமிழக ஆளுநரிடம் தான் கேட்க வேண்டும். என்ன டெக்னிக்கல் ரிசன் காரணமாக கையெழுத்திடாமல் இருக்கிறார் என்பது அவரை கேட்டால் தான் தெரியும். எந்த விதத்திலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு கூடாது என்பது தான் அனைவரது நிலைப்பாடுமே” எனப் பதிலளித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், ”தெலுங்கானாவில் அரசாங்கம் முரண்பாடாக இருக்கிறது. கவர்னர் முரண்பாடாக இல்லை. என்னிடமும் சில மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றது. அவற்றை தாமதப்படுத்த வேண்டும் என்று இல்லை. சில விபரங்களை கேட்டு இருக்கின்றோம். தெலுங்கானாவில் வேலைவாய்ப்பு தொடர்பான மசோதாவில் விபரங்களுக்காக நிறுத்தி வைத்து இருக்கின்றேன். அதில் இதுவரை இல்லாத வகையில் புதிய நடைமுறையை கொண்டு வருகின்றனர். இது மக்களுக்கு பலன் கொடுக்கின்றதா என்பதை பார்த்து விட்டு கையெழுத்திட வேண்டும். ஆளுநருக்கு கையெழுத்திட உரிமை இருப்பதை போல, சரியான நிலையில் மக்களுக்கு பலன் உள்ளதா என்பதை பார்த்து கையெழுத்திட வேண்டும். தாமதம் என்பதை விட கால அவகாசம் எடுத்துக் கொள்கிறேன் என சொல்ல வேண்டும். 


அரசியல் காரணத்திற்காக தெலுங்கானாவில் எனக்கு கவர்னர் உரை மறுக்கப்பட்ட போதும் பட்ஜெட் தாக்கலுக்கு எந்த இடையூறும் செய்யவில்லை. மக்கள் நலனை அடிப்படையாக வைத்து நான் இயங்கி  வருகின்றேன். ஆனால் என்னை புரிந்து கொள்ளாமல் சிலர் இங்கே விமர்சிக்கின்றனர். மக்களை ஆளுநர்கள் சந்திக்கலாம். ஆளுநர்களை சந்திப்பதால் பல பிரச்சினைகள் தீர்ந்து இருக்கின்றது. தமிழக ஆளுநர் ஒரு மதத்தை சார்ந்து பேசுகின்றாரா என தெரியவில்லை. மதச்சார்பற்ற தன்மையை  தமிழக முதல்வர் கடைபிடிக்க வேண்டும். முதல்வர் வாழ்த்து சொல்வதில் பாரபட்சம் காட்ட கூடாது. இதற்கு பதில் கிடைப்பதே இல்லை. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் துணை அரசாங்கம் நடத்த தான் நினைக்கிறோம். இணை அரசாங்கம் நடத்த நினைக்கவில்லை. ஆளுநர் செயல்பாடுகளை தவறாக புரிந்து கொள்கின்றனர்” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண