மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவையை ஒத்திவைப்பதாக அந்த மாநில ஆளுநர் நேற்று உத்தரவிட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்க மாநில ஆளுநரின் செயலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மாநில உரிமைகளை காக்க தி.மு.க. எப்போதும் துணை நிற்கும் என்று மம்தா பானர்ஜிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவாதம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, அன்பான சகோதரி மம்தா பானர்ஜி என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களால் அரசியலமைப்புச் சட்டமீறல்கள், வெட்கக்கேடான அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் குறித்த தனது கவலையையும், வேதனையையும் பகிர்ந்து கொண்டார். எதிர்க்கட்சியில் உள்ள முதல்வர்கள் கூட்டத்தை நடத்துவது தொடர்பாகவும் அவர் பரிந்துரைத்தார்.
மாநில சுயாட்சியை நிலைநாட்ட தி.மு.க. துணை நிற்கும் என்று உறுதியளித்தேன். டெல்லியில் எதிர்க்கட்சி முதல்வர்களின் மாநாடு விரைவில் நடக்கவுள்ளது.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.