ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தநிலையில், தமிழக மீனவர்கள் கைது செய்வதை தடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், இலங்கை சிறையில் உள்ள 41 மீனவர்களை விடுவிக்கும் பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்றும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யபடுவது ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். 






மேலும், இதுபோல் மீனவர்களை மீண்டும் மீண்டும் கைது செய்யபடுவதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட செயல் நீண்டகாலமாக தொடர்ந்து வருவதால் எரிச்சலூட்டும் சிக்கலுக்கு நிலையாக தீர்வினை காண்பது மிகவும் இன்றியமையாதது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


தொடர்ந்து, கடந்த இரண்டு வாரங்களில் இவ்வாறு நடந்துள்ள மூன்றாவது சம்பவம் இது என்பதையும் தற்போது வரை, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 41 பேரும் 6 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையின் வசம் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின், இதுபோன்று மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவதும் துன்புறுத்தப்படுவதுமான நிகழ்வுகள் தமிழ்நாட்டின் மீனவர் சமூகத்திடையே குறிப்பாக பாக் வளைகுடாப் பகுதியில் பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன் மீனவர்களின் வாழ்வாதாரங்களை மோசமாகப் பாதித்துள்ளதாகவும் தனது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.


ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளின் வாயிலாக நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் இந்த எரிச்சலூட்டும் சிக்கலுக்கு நிலையான தீர்வைக் காண வேண்டியது மிகவும் இன்றியமையாதது என்றும். அதன் தொடக்கமாக இருதாப்புப் பேச்சுவார்த்தைகளைக் கூட்டுவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும். கோவிட் தீவிரம் குறைந்துள்ள தற்போதைய நிலையில் கூட்டுச் செயற்குழுக் கூட்டம் (UWG) மூலம் பேச்சுவார்த்தைகளை உடனடியாக மீண்டும் தொடங்க வலியுறுத்துமாறும் மாண்புமிகு இந்திய பிரதமரைக் கேட்டுக்கொள்வதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அப்பகுதியில் பதற்றத்தைக் குறைக்கும் வகையில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கும் வழிவகை செய்திட வேண்டுமெனக் கோரியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 41 மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் பிரதமர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.


தொடரும் கைது : 


கடந்த ஆண்டு டிசம்பர் 18,19 தேதிகளில், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தென்னரசு, லியோன், பீட்டர் கருப்பையா உள்ளிட்ட 6 பேருக்குச் சொந்தமான விசைப்படகுகளையும் அதில் இருந்த 43 மீனவர்களையும், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற சபரிதாஸ், அருளானந்தம் ஆகிய இருவருக்குச் சொந்தமான இரண்டு விசைப் படகுகளையும் அதிலிருந்த 12 மீனவர்களையும், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டிணத்தில் இருந்து இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த மீனவர்கள் 13 பேரையும் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து அனுமதியின்றி மீன் பிடித்தாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படையினர் தனித்தனியாக சிறைப்பிடித்து யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் அடைத்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண