மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு அமைந்தது முதல் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை வளர்த்துவதற்காக பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பல்வேறு முதலீட்டாளர்களை முதலமைச்சரும், அமைச்சர்களும், அதிகாரிகளும் சந்தித்து வருகின்றனர்.

முதலமைச்சர் அமெரிக்கா பயணம்:


இந்த நிலையில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 10 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் செல்கிறார். முதலமைச்சருடன் தமிழக அரசின் உயர் அதிகாரிகளும் புறப்பட்டுச் செல்கின்றனர்.


சுற்றுப்பயண விவரம்:


மொத்தம் 17 நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சான்பிரான்ஸிஸ்கோ செல்கிறார். அங்கு வரும் செப்டம்பர் 2ம் தேதி வரை தங்கியிருக்க திட்டமிட்டுள்ளார். சான்பிரான்ஸிஸ்கோவில் வரும் 29ம் தேதி ( நாளை மறுநாள்) நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் பல்வேறு முன்னணி தொழில் நிறுவன தலைவர்களை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க உள்ளார்.


அமெரிக்கா வாழ் தமிழர்களை வரும் செப்டம்பர் 31ம் தேதி சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிக்க உள்ளார். 2ம் தேதி சான்பிரான்ஸிஸ்கோவில் இருந்து சிகாகோவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். சிகாகோவில் உலகின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான பார்ச்சூன் நிறுவன தலைமை நிர்வாகிகளை நேரில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் தொழில் திட்டங்களை செயல்படுத்தவும் அழைப்பு விடுக்க உள்ளார்.


புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு:


சிகாகோவில் பல்வேறு தொழில் நிறுவன தலைமை அதிகாரிகளை நேரில் சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் 7ம் தேதி வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் மற்றும் அமெரிக்காவின் தமிழ்ச்சங்கங்கள் இணைந்து நடத்தும் வணக்கம் அமெரிக்கா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.  அமெரிக்காவில் 17 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் செப்டம்பர் 12ம் தேதி சென்னை திரும்புகிறார்.


முதலமைச்சரின் இந்த சுற்றுப்பயணத்தின்போது தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உடன் செல்ல உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின்போது பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.