முறையான வடிகால் திட்டங்கள் இல்லாத காரணத்தால் மழைக்காலங்களில், சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்குவது முக்கிய பிரச்னையாக இருந்தது. கடந்தாண்டு பருவமழையின்போதும் சென்னை ஸ்தம்பித்தது. அப்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், அடுத்த ஆண்டு சென்னையில் மழைநீர் தேங்காது எனவும், வடிகால் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.
மாறிய சென்னையின் முகம்:
இந்நிலையில், நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல், சென்னை முழுவதும் விட்டு விட்டு கனமழை கொட்டி வருகிறது. இன்று அதிகாலையிலும் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டியது. ஆனாலும், மாநகராட்சியின் சீரான நடவடிக்கை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முறையாக வடிநீர் கால்வாய் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததும், மோட்டர்களை கொண்டு சாலைகளில் தேங்கும் நீர் உடனடியாக அகற்றப்படுவதும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மாறாத வடசென்னையின் அவலம்:
அதேநேரம், வடசென்னையின் பல பகுதிகளில் ஆங்காங்கே முழங்கால் உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. ஆவடி உட்பட்ட பல பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால், உடனடியாக நீரை அகற்றுவதோடு அங்குள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீருடன் கழிவுநீரும் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் இன்னும் மூடப்படாததால், அதில் தேங்கியுள்ள நீரில் கொசுக்களும் அதிகளவில் உருவாகியுள்ளன.
வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் courtesy: sun news
முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு:
இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் நீர்நிலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசு வலைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து, ஓட்டேரி நல்லா கால்வாய், ஸ்டீபன்சன் சாலையில் நடைபெறும் மேம்பால பணிகளை ஆய்வு செய்தார்.
பல்லவன் சாலை மற்றும் வீனஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில், நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் முதலமைச்சர் பார்வையிட்டார். பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
இன்று இரவு சீர்காழி செல்கிறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், அதீத கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழிக்கு இன்று இரவு செல்ல இருப்பதாகவும், சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் கடலூர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழைவெள்ள பாதிப்புகளை நாளை ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறினார். எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் தயாராக உள்ளதாகவும், மழைநீர் வடிகால் பணிகள் சிறப்பாக நடைபெற்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும், பொதுமக்கள் தங்களை பாராட்டினாலே போதும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த மாதம் வடசென்னையில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், அடுத்த ஆண்டுக்குள் வடசென்னை பகுதியிலும் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, மழைநீர் தேங்காத சூழல் உருவாக்கப்படும் என உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.