CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் இருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, காய்ச்சல் பாதிப்பை குறைக்க உரிய சிகிச்சை பெறவும், சில நாட்கள் ஓய்வு பெறவும் அந்த மருத்துவ அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






தொடரும் காய்ச்சல்:


பருவமழை தொடங்குவதற்கு முன்பில் இருந்தே தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு என்பது மிகவும் பரவலாக உள்ளது. இதன் காரணமாகவே மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் ஆயிரம் மருத்துவ முகாம்கள் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கு காய்ச்சல் தொடர்பான மழைக்கால பாதிப்புகள் தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


ரத்தான அரசு நிகழ்ச்சிகள்:


முதலமைச்சர் ஸ்டாலின் அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பது, ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவது, ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது என தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, இன்று காலை சென்னை பெசன்ட் நகரில் ”நடப்போம் நலன் பெறுவோம்: என்ற அரசின் புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அமைச்சர் உதயநிதி அந்த திட்டத்தை தொடக்கி வைத்தார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடல்நலன் சரியில்லாத காரணத்தினாலேயே இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை என கூறப்பட்ட நிலையில்,  தற்போது அது உறுதியாகி உள்ளது.


முன்னதாக நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றைய தினம் சென்னை தலைமை செயலகத்தில் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருந்த நிலையில் கடைசி நேரத்தில் அவை ரத்து செய்யப்பட்டன. மேலும் அண்ணா அறிவாலாயத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கும் அவர் செல்லவில்லை. இந்நிலையில் தனக்கு உடல் நிலை சரியில்லை எனவும், மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தி இருப்பதையும், முதலமைச்சர் ஸ்டாலினே தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.