விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில்,‘நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தினை இன்று (04.11.2023) கொடியசைத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் துவக்கி வைத்தார்.
இது குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவிக்கையில்…
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “நடப்போம் நலம் பெறுவோம்” எனும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு நடைபயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் நடைபாதைகள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்கள். அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து ஏறத்தாழ 10,000 அடிகளை உள்ளடக்கிய சுமார் 8 கிலோமீட்டர் தூரமுள்ள விழுப்புரம் பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் தொடங்கி நேராகச் சென்று பின்நுழைவாயிலின் இடதுபுறம் உள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டு அலுவலகம் வழியாக எல்லிஸ் சத்திரம் ரோடு வரை சென்று திரும்பி, விழுப்புரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வழியாக மாம்பழப்பட்டு ரோட்டிற்கு சென்று மீண்டும் புறவாயிலில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தைக் கடந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக நுழைவுவாயிலில் நடைபாதை நிறைவுபெறுமாறு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், நடைபாதை வழியில் குடிநீர்வசதி அமைத்தல், மைல்கல் நடுதல், இளைப்பாற இருக்கைகள் அமைத்தல், மரங்கள் நடுதல், வண்ணபூச்செடிகள் அமைத்தல், நடைபயிற்சி குறித்த விழிப்புணர்வு பதாகைகள் அமைத்தல் ஆகிய பணிகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுரையின்படி விழுப்புரம் நெடுஞ்சாலைத் துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம், தோட்டகலைத் துறை மற்றும் சுகாதாரத் துறையினர் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், இன்றைய தினம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையில் ‘நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில், ‘நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தின்கீழ் 8 கி.மீ கொண்ட நடைபயிற்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்ட ‘நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தின்கீழ் 8 கி.மீ கொண்ட நடைபயிற்சியில், 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு நடைபயிற்சி மேற்கொண்டனர். பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, உடற்பயிற்சி செய்வதால் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோய்களின் தாக்கத்தை 28 சதவீதமும், இதயநோயின் தாக்கத்தை 30 சதவீதமும் குறைக்கின்றது என்று அறியப்படுகிறது. அதனடிப்படையில், நடை பயிற்சியானது ஒரு மனிதனுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவிலான உடல் எடையை பராமரிப்பதன் மூலமாக மக்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், நாள்பட்ட உடல் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தங்களை குறைத்து ஆரோக்கியமான வாழ்வைப் பெறவும் உதவுகிறது. நடைப்பயிற்சி என்பது உடலை சீக்கிரம் சோர்வடையச் செய்யாத சிறந்த உடற்பயிற்சியாகும்.
மேலும் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கச் செய்யும். ஏனென்றால் உடற்பயிற்சியின்போது உடல் தொடர்ச்சியான இயக்கத்தில் இருப்பதால், நிலையான ஆற்றல் தேவைப்படும். எனவே செல்கள் வழக்கத்தை விட அதிக ஆற்றலை உற்பத்தி செய்யும். இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், ஆற்றல் அளவையும் அதிகரிக்கும். வீட்டிற்குள் 10 நிமிடங்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருப்பது நடைப்பயிற்சி இல்லை. சரியான நடைப்பயிற்சி என்பது இயற்கையான சுற்றுப்புறத்துடன் கூடிய சுகாதாரமான காற்றோட்ட வசதி கொண்ட பூங்காவில் அல்லது வீட்டிற்கு வெளியே தெருவில் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்களுக்கு மேல் நடந்து செல்வதாகும்.
நடைபயிற்சியானது உடல் ஆரோக்கியமான எடையுடன் இருக்கவும், நாள்பட்ட பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. உலக சுகாதார அமைப்பின் தரவுகள்படி உடற்பயிற்சி செய்வதால் நீரிழிவு இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயின் தாக்கம் குறைகின்றது. எனவே, நாம் அனைவரும் நாள்தோறும் நடைபயிற்சி மேற்கொள்வோம் நல்ல உடல் ஆரோக்கியத்தினை பெற்றிடுவோம்” என அமைச்சர் மஸ்தான் அவர்கள் தெரிவித்தார்.