தெலங்கானா முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரேவந்த் ரெட்டிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். 






அதில், ”எங்கள் தொலைபேசி உரையாடலின் போது,திரு. ரேவந்த் ரெட்டிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தேன். தெலுங்கானா முதலமைச்சராக அவர் பதவியேற்க தயாராகி வருகிறார். அவரது பதவிக்காலம் வெற்றிகரமானதாகவும் தாக்கமிக்கதாகவும் அமைய வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார். 


தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக இன்று ஹைதராபாத்தில் உள்ள எல்பி ஸ்டேடியத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் பதவியேற்கிறார். 


உத்தம் குமார் ரெட்டி, ஸ்ரீதர் பாபு, பொன்னம் பிரபாகர், கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி, தாமோதர் ராஜநரசிம்மா, பொங்குலேட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, தனா அனசூயா, தும்மல நாகேஸ்வர ராவ், கொண்டா சுரேகா, ஜூபல்லி கிருஷ்ணாராவ் ஆகிய 12 அமைச்சர்கள் ரேவந்த் ரெட்டியுடன் பதவியேற்க உள்ளனர். தெலுங்கானா மாநிலத்தின் துணை முதல்வராக மல்லு பாட்டி விக்ரமார்கா மற்ற அமைச்சர்களுடன் பதவியேற்பார் என்றும் தெரிகிறது. 


முதலமைச்சராக பதவியேற்கும் ரேவந்த் ரெட்டியின் பிரமாண்டமான பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் (சிபிபி) தலைவர் சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.






தெலுங்கானாவில் வெற்றி பெற்றதை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இன்று நடைபெறும் விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்கராவ் தாக்கரே ஆகியோர் கலந்து கொள்கின்றனர். விழாவில் பல்வேறு மாநில காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆர்., கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை டி.கே.சிவகுமார், தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலின், அண்டை மாநிலமான ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்ற பிறகு, தேர்தல் உத்தரவாதத்தை நிறைவேற்றும் கோப்பில் கையெழுத்திடுவார்.