மிக்ஜாம் புயல் அடித்து ஓய்ந்த நிலையில் சென்னையை தாக்க மீண்டும் ஒரு புயல் கிளம்பியுள்ளது என வெளியான தகவலுக்கு தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார். இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 


மிக்ஜாம் புயலால் சென்னையே தலைகீழாக மாறியுள்ளது. அதன் பாதிப்பு மக்களின் வாழ்வாதாரங்களை நிலைகுலைய செய்துள்ளது. எங்கும் தண்ணீர் மயமாக காட்சி அளிக்கிறது. மீட்பு பணிகளை அரசு முன்னெடுத்தாலும் அனைவருக்கும் அது போதுமானதாக இன்னும் மாறவில்லை. 


பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மழைநீர் வடியாததால் பலர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். நிலைமை சீரடைய கொஞ்சம் கொஞ்சமாக மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகின்றது. 


தவிக்கும் மக்களுக்கு தேவையான உணவு பொட்டலங்களும் ஆங்காங்கே கொடுக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு உதவ சூர்யா, கார்த்தி, விஜய், பார்த்திபன் போன்ற சினிமா பிரபலங்களும் முன் வந்துள்ளனர். 


மிக்ஜாம் அடித்த புயல் காரணமாக ஏராளமான பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளதால் மாநில அரசு மத்திய அரசிடம் ரூ.5, 060 கோடி இழப்பீடு தொகை கேட்டுள்ளது. இதுகுறித்த கடிதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார். இவ்வாறு மிக்ஜாம் புயலில் இருந்து மீளாமல் சென்னை தத்தளித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை தாக்க மீண்டும் ஒரு புயல் கிளம்பியுள்ளது என்று மேலும் ஒரு தகவல் பரவி வருகிறது. இதைப்பார்த்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவசர விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். 






இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “சென்னையை நோக்கி அடுத்த வாரம் புயல் வரும் என்ற செய்தி அடிப்படை ஆதாரமற்றது. இதுபோன்ற செய்திகளை நம்ப வேண்டாம். 10 ஆம் தேதி அரபிக் கடலில் சில வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழ்த்த தாழ்வு பகுதி உருவாகலாம். அது இந்திய கடற்கரையை விட்டு நகர்ந்து சென்று விடும். இதனால் சென்னைக்கு ஆபத்து இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.