தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 


தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்த நாளினைக் கொண்டாடி வருகிறார். இவருக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்திய அளவில் உள்ள அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். அதேபோல், திமுக தொண்டர்களும் வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் வாயிலாக கூறி வருகின்றனர்.


இந்நிலையில் இவரது பிறந்த நாள் வாழ்த்து ஹேஷ்டேக் (HBDMKStalin70) உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.


இந்திய அளவில் உள்ள இன்று காலை முதலே ட்ரெண்ட் ஆகிவந்த ஹேஷ்டேக் HBDMKStalin70 என்பது தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மேலும், HBDMKStalin70  என்பது உலக அளவிலான டிரெண்டிங்கிலும் முதல் ஐந்து இடங்களில் உள்ளது.  அண்மைக்கால தமிழக வரலாற்றில், அரசியல் தலைவர் ஒருவரின் பிறந்த நாள்  வாழ்த்து உலக அளவில் ட்ரெண்ட் ஆவது இதுவே முதல் முறையாகும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.  முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70வது பிறந்த நாளினை முன்னிட்டு திமுக ஐ.டி.விங் (தகவல் தொழில்நுட்ப அணி) முதலமைசருடன் செல்ஃபி, செல்போன் மூலம் வாழ்த்து தெரிவிப்பது உள்ளிட்ட பல வகை உத்திகளை அறிமுகப்படுத்தி தொண்டர்களையும் பொதுமக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது, இது போன்ற டிரெண்டிங் ஆவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில், திமுக-வின் "ஐடி விங்"  பயணத்தில், உலக அளவிலான இந்த டிரெண்டிங் என்பது ஒரு மைல்கல்லாகவே பார்த்தாலும் மிகையில்லை.   




தமிழ்நாட்டினை இதற்கு முன்னர் ஆட்சி செய்த மற்ற முதல்வர்களை விடவும் அதிக வயதில் முதலமைச்சாரானவர் என்றால் அது தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான்.  2021ல் தேர்தலை சந்திக்கும் முன்னரே ”விடியல் ஆட்சி” அமைப்போம் என தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டு ஆட்சியை பிடித்து தமிழ்நாடு மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். 


குறிப்பாக இவர் ஆட்சி பொறுப்பு ஏற்ற காலத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது. அந்த நெருக்கடி காலத்தில் தனது அமைச்சர் படையுடன் களத்தில் சுழன்று சுழன்று  சிறப்பாக பணியாற்றி மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்றனர். 


ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் செயல்படுத்திய, மகளிருக்கு பேருந்தில் கட்டணமில்லா பயணத் திட்டம், ஆவின் பால் விலை ரூ. 3 குறைப்பு, கொரோனாவால் பாதிப்பு அடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு  காப்பீடு திட்டம்,  குடும்ப அட்டை தாரர்களுக்கு கொரோனா நெருக்கடியை சமாளிக்க  முதல் தவணையாக ரூபாய் 2,000 வழங்கும் திட்டம் மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்களின் குறைகளை 100 நாட்களில் சரி செய்ய புதிய துறை உருவாக்கப்பட்டது. இந்த ஐந்து திட்டங்களும் தமிழ்நாட்டு மக்களால் மட்டுமின்றி இந்திய அளவில் அனைவராலும் பாராட்டினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 


அதேபோல், முதலமைச்சராக பொறுப்பேற்று அவர் கொண்டாடும் இரண்டாவது பிறந்த நாள் என்பதால், திமுக வட்டாரத்தில் தொண்டர் படை தொடங்கி பொறுப்பாளர் படை வரை அனைவரும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வந்தனர்.