”தமிழ் எழுதவும் பேசவும் படிக்கவும் மறந்த தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தமிழை சொல்லிக்கொடுக்க தான் தமிழ் பரப்புரைக் கழகம் தொடங்கப்பட்டுள்ளது” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.


சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் பரப்புரைக் கழகத்தை முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியவை பின்வருமாறு:


இந்தத் தமிழ் தொண்டை செய்துவருகிற, அமைச்சராக பொறுப்பேற்றிருக்கக் கூடிய மனோ தங்கராஜை நான் இந்த நேரத்தில் பாராட்ட விரும்புகிறேன்.


தமிழ் இலக்கியங்களை காப்பாற்றியவர்கள்


இந்தப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் தமிழ் இணைய கல்விக் கழக் தலைவர் உதயசந்திரன் ஐஏஎஸ்ஸையும் நான் இந்த நேரத்தில் மனமாரப் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.  சி.வை.தாமோதரனார், உ.வே.சாமிநாதர் போன்ற ஒரு சிலரால் தான் தமிழ் இலக்கியங்கள் காப்பாற்றப்பட்டன. அதேபோன்ற பணியை தனி அக்கறையுடன் செயல்படுத்தி வரும் அனைவருக்கும் அரசின் சார்பில் நன்றி.


இதற்கு மகுடம் வைப்பது போல் தமிழ் பரப்புரைக் கழகம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகமாகவும், 60க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைவாகவும் வாழ்கிறார்கள். சில நாடுகளில் தமிழ் எழுதவும் பேசவும் படிக்கவும் மறந்த தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தமிழை சொல்லிக்கொடுக்க தான் தமிழ் பரப்புரைக் கழகம் தொடங்கப்பட்டுள்ளது.


அன்பால் இணைக்கும் மொழி


24 மொழிகளில் தமிழ் பாட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 30 நாடுகள், 20 மாநிலங்களைச் சேர்ந்த தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்களும் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைய வழியாக இதில் பங்கேற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.


தமிழ் வெறும் மொழியல்ல, அது நம்  உயிர். தமிழை ‘தமிழே’ என்று அழைப்பதில் உள்ள சுகம் வேறு எதிலும் இல்லை. 


உணர்வால் உள்ளத்தால் தமிழால் நாம் அனைவரும் இணைந்துள்ளோம். அமெரிக்கா, குவைத், ஓமன், நார்வே போன்ற நாடுகளைச் சேர்ந்த நம் உறவுகளும் இணைந்திருக்கிறார்கள். மொழிக்கு மட்டும் தான் இத்தகைய அன்பால் இணைக்கக்கூடிய ஆற்றல் உண்டு” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழை வளர்க்கத் தொடங்கப்படும் தமிழ்ப்‌ பரப்புரைக் கழகம் என்ன செய்து வருகிறது? பார்க்கலாம்.  


* தமிழை எளிமையாகக்‌ கற்பதற்கான தமிழ்ப்‌ பாடநூல்கள் உருவாக்கம்‌. 


* வெளிநாடுகள்‌ மற்றும்‌ வெளி மாநிலங்களில்‌ தமிழைக்‌ கற்பிக்கும்‌ அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குதல்‌,


* தமிழைத்‌ திறம்பட கற்பிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல்‌,


* புலம்பெயர்ந்த தமிழர்கள்‌ மற்றும்‌ அயல்நாட்டில்‌ வசிக்கும்‌ தமிழர்களுக்கு ஐந்து நிலைகள் மூலம் புதிய பாடத்திட்ட அடிப்படையில்‌ புத்தகங்கள்‌ உருவாக்கம், 


* புத்தகத்தை 24 மொழிகளில்‌ மொழிபெயர்த்து வழங்குதல்‌, 


* செயல் வழிக்‌ கற்றல்‌ என்ற அடிப்படையில்‌ கற்பித்தல்‌ துணைக் கருவிகளை உருவாக்கி, அதனை இணையம்‌ வழியாக வழங்குதல்‌, 


* ஒளி - ஒலிப்‌ புத்தகமாக வடிவமைத்தல்‌, 


* அசைவூட்டும்‌ காணொலிகளை வழங்குதல்‌,


* சொற்களஞ்சியத்தைப்‌ பெருக்கும்‌ விதமாக மின்‌ அட்டைகள்‌ வழங்குதல்‌, 


* இணையம்‌ வழியாகக் கற்றல்‌ பயிற்சியை வழங்குதல்‌, 


* கற்றறிந்த ஆசிரியர்களைக்‌ கொண்டு இணைய வகுப்புகள்‌ எடுத்தல்‌, 


* தேவைகளுக்கேற்ப ஆசிரியர்கள்‌/கலைப்‌ பயிற்றுநர்களை அயல்நாட்டுக்கு அனுப்புதல்‌,


* மொழித்திறனை வளர்க்கும்‌ பயிற்சிகள்‌, தேர்வுகள்‌ முதலானவற்றை மேற்கொள்ள கற்றல்‌ மேலாண்மை அமைப்பு (Learning Management System) செயலி உருவாக்கம்,


தமிழ் மொழியை அயலகத்‌ தமிழர்களுக்கு இணைய வழியில்‌ கற்றுக்‌ கொடுக்க 100 ஆசிரியர்கள்‌ தேர்வு‌ ஆகிய பணிகளை தமிழ்ப்‌ பரப்புரைக் கழகம் மேற்கொண்டுள்ளது.


தமிழ்ப்‌ பரப்புரைக் கழகத்தின் எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?


* அயல்நாடுகளில்‌ உள்ள தன்னார்வலர்கள்‌ முறையாகத்‌ தமிழைக்‌ கற்பிக்க அவர்களுக்கு ஆசிரியர்‌ பட்டயப்‌ பயிற்சி.


* காணொலி வடிவில் சிலம்பாட்டத்தின்‌ அடிப்படைப்‌ பயிற்சிகள்‌.


* நிகழ்த்து‌ கலைகளைப்‌ பயிற்சிக்‌ காணொலிகளாக வழங்குவதற்கான முன்னெடுப்பு.


* தேவாரம், திருவாசகப் பாடல்களை ஓதுவார்களால்‌ இசை நயத்துடன்‌ பாடச்‌ செய்து, வரலாற்றுத்‌ தலங்களின்‌ சிறப்பைக்‌ காட்சிப்படுத்தும்‌ காணொலிகள்‌ உருவாக்கம் ஆகிய பணிகளை தமிழ்ப்‌ பரப்புரைக் கழகம் செய்ய உள்ளது.